×

இருப்பிடத்திற்கு பட்டா வழங்கக்கோரி டொம்பர் இன மக்கள் தாலுகா அலுவலகம் முற்றுகை

பேரையூர், மே 7: பேரையூரில் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு நில அளவை செய்து பட்டா வழங்கக்கோரி டொம்பர் இன மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.மதுரை மாவட்டம், பேரையூரில் டொம்பர் இன மக்கள் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பேரையூர் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசாமி கோவில் அருகில் பேரையூர் பேரூராட்சி குப்பை கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் குடியிருந்து வந்தனர். அங்கு தொற்றுநோய் பரவும் என்பதால் முன்னாள் தாசில்தார் இளமுருகன் கழுதைக்கணவாய்க்கு மேற்புறமுள்ள அனாதீனம் நிலத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் குடியிருந்துகொள்ள இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார்.

அங்கு தற்போது குடிசை அமைத்து டொம்பர் இன மக்கள் வசித்து வந்தனர். அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் சூறாவளிக்காற்று அனைத்து குடிசைகளையும் தூக்கி எறிந்துவிட்டது. இதனால் இருக்க இடமில்லாமல் தவித்து வந்தனர். இந்த இடத்திற்கு இதுவரை நில அளவை செய்து பட்டா வழங்கவில்லை. இதனால் நேற்று காலை டொம்பர் இன மக்கள் நில அளவை செய்து பட்டா வழங்கக்கோரி பேரையூர்தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.தாசில்தார் அலுவலகத்தில் இல்லாததால் வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு மாலை 4 மணிக்கு அலுவலகம் வந்த தாசில்தார் ஆனந்தியிடம் இது சம்மந்தமாக புகார் மனுவை கொடுத்தனர். புகார் மனுவை படித்துவிட்டு இடத்தை நேரில் வந்து பார்த்துவிட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கிறேன் என தாசில்தார் கூறியதாக டொம்பர் இனமக்கள் தெரிவித்தனர்.

Tags : Tomboura ,location ,
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!