×

பேரிடரின்போது உடனடியாக செயல்பட 1,540 மீட்புப்பணியாளர்கள் தயார் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருச்சி, மே7:  திருச்சி மாவட்டத்தில் பேரிடரின்போது உடனடியாக செயல்பட 1,500 மீட்பு பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது:

திருச்சி மாவட்டத்தில் பேரிடரின்போது பேரிடரை தணிக்கும் பொருட்டும், உடனடியாக செயல்படுவதற்கும் 1,540 முதல்நிலை மீட்புப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள் ஆவர். டிஎன்-ஸ்மார்ட் என்ற செயலி பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையால் 2018 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இச்செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் மழைமானி அமைக்கப்பட்டுள்ள 25 இடங்களின் மழையளவு, காலநிலை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் தீவிபத்து ஏற்படும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் மற்றும் செயல்படக்கூடாது ஆகிய விபரங்கள் மற்றும் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கைகள் ஆகிய விபரங்களை இச்செயலி மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். பேரிடர்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, வீடுகள் சேதம், சாலைகளில் காற்றினால் மரம் வீழ்வு, போக்குவரத்து தடை, மின்கம்பி அறுந்து விழுதல், மின்கம்பம் விழுதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்நிலைப்பிடிப்புகளில் அபாயகரமான அளவில் நீர்வரத்து ஆகிய விபரங்களை புகாராகவோ அல்லது தகவலாகவோ இச்செயலியின் மூலம் பதிவு செய்யலாம். இதன்மூலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

எனவே முதல்நிலை மீட்புப்பணியாளர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து பேரிடர் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும் ஆர்டிஓக்கள், தாசில்தார்கள் இச்செயலியில் முதல்நிலை மீட்புப்பணியாளர்களின் பெயர், அலைபேசி எண் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என்றார். டிஆர்ஓ சாந்தி, துணை கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், பிஏ (பொது) சிவருத்ரைய்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Rescuers ,review meeting ,
× RELATED தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு...