×

மன்னார்குடி- முத்துப்பேட்டை நெடுஞ்சாலையில் 10 கிமீ தூரத்திற்கு அரிப்பால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

மன்னார்குடி, மே 7: மன்னார்குடி முத்துப்பேட்டை இடையிலான நெடுஞ்சாலையில் இடைச்சி மூலையிலிருந்து குறிச்சி வரை  10 கிமீ தூரத்திற்கு 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு  அதனை உடன் சீரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முத்துப்பேட்டை இடையே 30 கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினம்தோறும் 24 மணி நேரமும் பேருந்து, வேன், லாரி, மினி லாரி போன்ற கனரக வாகனங்கள் அதிக அளவில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்த வழித்தடம் மூலம் முத்துப்பேட்டை, கோவிலூர், வண்டல்வெளி, பால வாய், செருகளத்தூர், சித்தமல்லி, குமட்டித்திடல், பெருகவாழ்ந்தான், மண்ணுக்கு முண்டான், இடைச்சிமூலை, பாலையூர், கெழுவத்தூர், குறிச்சி உட்பட 50க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என்று இச்சாலை வழியே மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், கோட்டூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்.

இப்படி அதிக அளவில் மக்கள் செல்லும் பேருந்து சாலையில் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் அருகே இடைச்சிமூலையிலிருந்து குறிச்சி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சாலையின் மேல்புறம் பாமணி ஆறும், கீழ்புறம் பள்ளமான வாய்க்காலும் உள்ளது. இந்நிலையில் 2 வருடத்திற்கு முன்பு பெய்த கடும் மழையாலும், கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலாலும் இச்சாலையின் இருபுறத்திலும் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் அரிப்பு ஏற்பட்டு சாலை இருபுறமும் பள்ளமானதால் சவுக்கு மரங்கள் நட்டு மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
அதுவும் முறையாக செய்யாமல் உள்ளதால் வாகனம் ஒன்றொடு ஒன்று மாறி செல்லும் போது பயணிகள் அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால்  இச்சாலையை இருபுறத்தையும் முறையாக சீரமைத்து இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட்  தடுப்பு கட்டி மக்களின் பயணத்தை நல்ல முறையில் உறுதி செய்ய  வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mannargudi ,accidents ,highway ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...