×

நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல்லை அரவைக்கு எடுத்து செல்வது தொடர்பாக ஆலை அதிபர்கள் மிரட்டல் திருவாரூர் கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நெல்லை அரவைக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களை மிரட்டுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த 1972ம் ஆண்டில் துவங்கப்பட்டது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவுபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடோன்கள் மற்றும் அரவைக்காக நவீன அரிசி ஆலைகள் போன்றவற்றிற்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி  வெளி மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் நெல் மற்றும் அரிசி அனுப்பும் பணியிலும் இந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து  நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்களிடம்  தங்களது  லாரிகள் மூலம் மட்டுமே நெல்களை எடுப்போம் என்றும், இதனை மீறி உங்களது லாரிகள் மூலம் நெல் வந்தால்  அதனை ஆலைக்குள் விட மாட்டோம் என்றும், இதுகுறித்து போலீசில் புகாரும்  அளிக்கப்படும் என்றும் அரிசி ஆலை அதிபர்கள் லாரி உரிமையாளர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் இது குறித்த மனுவினை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்திடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அய்யப்பன், பொதுச் செயலாளர் பாண்டியன், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் பொறுப்பாளர்கள் அளித்தனர். இதுகுறித்து பொதுச் செயலாளர் பாண்டியன் கூறுகையில், நுகர்பொருள் வாணிப கழகம் துவங்கப்பட்ட ஆண்டு முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமே நெல் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் அவர்களது லாரி மூலம் மட்டுமே அரவைக்கு நெல் எடுப்போம் என்று கூறி வருவதுடன் எங்களை மிரட்டியும் வருகின்றனர்.

கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் இவ்வாறு நவீன அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் அரவைக்கு பின் கோழித்தீவனமாக அந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதில் அப்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய கெட்ட பெயரினை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்படுத்தினர்.

இந்நிலையில் தங்களது தவறுகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக இதுபோன்று எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே தற்போது நடைமுறையில் இருந்து வருவதை போன்றே  லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த லாரிகள் மூலம் மட்டுமே நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் எடுத்து செல்லும் பணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம். இவ்வாறு பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags : Lorry Owners Association ,Collector ,Tiruvarur ,Consumer Merchandising Corporation ,Nellai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...