×

யானை தாக்கி சுற்றுலா பயணி கார் சேதம்

கூடலூர், மே 7: கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணி ஒருவரின் காரை காட்டு யானை சேதப்படுத்தியது. கூடலூர் - மைசூர் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதி முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதியாக உள்ளது. இரவு 9 மணி முதல் இந்த சாலை  மூடப்படுவதால், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தொரப்பள்ளி பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இரவு நேரத்தில் தொரப்பள்ளி பகுதிக்குள் வந்து செல்வது  வாடிக்கையாக நடக்கும். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது ஒற்றை யானை ஒன்று முதுமலை வனப்பகுதியில் இருந்து தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் நடமாடி வருகிறது.

  இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணியின் கார் தொரப்பள்ளி பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் வந்த பயணிகள் காரில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் வந்த காட்டு யானையை பார்த்து சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டுள்ளனர். அங்கு வந்த யானை நின்ற காரின் பின்புற கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தூக்கி வீசி சென்றது. காரில் வந்தவர்கள் அருகில் இருந்த கடைகளுக்குள் ஓடி தப்பினர். இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைைய விரட்டினர்.

Tags : tourist traveler ,
× RELATED ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து...