×

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நூலகங்களை மேம்படுத்த வேண்டும் மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உள்ள நூலங்களை மேம்படுத்த வேண்டும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலை அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரிகள் என நான்கு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதில் அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்படுகிறது.
இந்த கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரிகளில் உள்ள நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லை என்றும், தற்போது புதிதாக வந்துள்ள புத்தகங்களை கொள்முதல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பாடபுத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பாடபுத்தகத்தை மட்டுமே படித்தால் அவர்களால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாது. பொது அறிவு புத்தகம் படித்தால் சிந்தனை பிறக்கும் என்பார்கள். அதற்கு ஏற்றார்போல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு தொடர்ந்து புதிய புதிய புத்தகங்களை வாங்கி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் பாடங்கள், பொது அறிவு, அறிவியல் அறிவு, அரசியல் அறிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும். அப்போதுதான் இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் பங்குபெற்ற வெற்றி பெற முடியும். இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இது குறித்து கல்வியாளர்கள்  கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமங்களில் உள்ள விசாயிகள், கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள். இதனால் இவர்களுக்கு வீட்டில் பாடப்புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் இல்லை. இதனால் கல்லூரிகளில் உள்ள நூலகங்களில் புதிய புதிய புத்தகங்களை வாங்கி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இதனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி பாடங்களை தாண்டி தங்களின் அறிவுகளை வளர்த்துக்கொள்ள முடியும். கல்லூரிகளில் படித்து முடித்து வெளியில் செல்லும் மாணவர்கள் நல்ல பணியில் சேருவதற்கு பாடப்புத்தகங்களை விட பொது அறிவு மற்றும் தனித்திறன் வேண்டும். இதற்கு கல்லூரிகளில் படிக்கும்போதே அங்குள்ள நூலகங்களில் ஏராளமான பொது அறிவை வளர்க்கும் வகையில் அதற்கேற்ற புத்தகங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் தங்கள் கல்லூரியில் பொது அறிவை வளர்க்கும் புத்தகங்கள் உள்ளதை மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் வேண்டும். இதற்கு கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய புத்தகங்களை வாங்கி கல்லூரி நூலகத்தில் வைக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறியவில் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதாக தெரியவில்லை. அப்படி வாங்கினாலும் அதிகமான புத்தகள் வாங்குவதில்லை. கிராமங்களில் இருந்து வரும் நாங்கள் அனைத்து பாடபுத்தகங்களை வாங்கும் அளவிற்கு எங்களிடம் போதிய பொருளாதாரம் இல்லை. இதனால் நூலகத்தில் வந்துதான் சில புத்தகங்களை எடுத்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.   இதனால் அவர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் வகையில் கல்லூரி நூலகத்தை மேம்படுத்தி புதிய புதிய புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும் என்றனர்.

Tags : academicians ,libraries ,government arts science colleges ,
× RELATED பொது நூலகத்துறையில் நூல் கொள்முதல் செய்ய இணைய தளம் தொடக்கம்