×

அம்பராம்பாளையம் மேம்பாலத்தில் உடைந்த நடைபாதையால் மக்கள் அச்சம்

பொள்ளாச்சி, மே 7:     பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்றான மீன்கரைரோட்டில் உள்ள அம்பராம்பாளையம் வழியாக ஆழியார் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் குறுக்கே சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு, பழைய பாலத்தை அடித்துவிட்டு  புதிய பாலம் கட்டப்பட்டது. மேலும், பாலம் கட்டும்போதே, இருபக்கமும் நடைபாதை அமைக்கப்பட்டதுடன், பொதுமக்கள் விரைந்து செல்ல வசதியாக அடுக்கடுக்காக ஸ்லாப் ஏற்படுத்தப்பட்டது.அம்பராம்பாளையத்தில் உள்ள ஆற்று பாலத்தில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. ஆனால், அந்த வழியாக நடந்து செல்வோருக்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட நடைபாதையில் உள்ள ஸ்லாப்கள் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட ஆரம்பித்தது. பின் நாள்போக்கில் பெரும்பாலான ஸ்லாப்கள் ஆங்காங்கே உடைந்த நிலையானது.

 தற்போது, பாலத்தின் இருபுறமும் உள்ள நடைபாதையின் பெரும்பகுதி ஸ்லாப்கள் பெயர்ந்து பள்ளமாகியுள்ளது. சில இடங்களில் உடைந்து தொங்கிகொண்டிருக்கிறது. இதனால்  பாலத்தை கடந்து வருவோர், நடைபாதையில் நடந்து செல்வதை தவிர்த்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், பாலத்தின் நடைபாதையில் வந்த ஒரு நபர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.இதன் காரணமாக அம்பராம்பாளையம் பாலத்தை கடந்து   செல்வோர், வாகனங்கள் விரைந்து செல்லும் ரோட்டோரம் நடந்து செல்ல வேண்டியதாக உள்ளது. அவ்வாறு செல்லும்போது சிலநேரத்தில் விபத்து உண்டாகிறது. அம்பராம்பாளையத்தில் உள்ள ஆற்று பாலத்தின் இருபுறத்திலும் உடைந்த நடைபாதை ஸ்லாப்பை அப்புறப்படுத்தி விட்டு, விபத்து ஏற்படாத வகையில் நடந்து செல்ல வசதியாக புதிய ஸ்லாப் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி முகாம்