ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் உட்பட 7 பேர் உடல் நசுங்கி பலி

* சுற்றுலா வந்த இடத்தில் சோகம் * டிஐஜி, எஸ்பி நேரில் விசாரணை

ஆம்பூர், மே7: ஆம்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு டிஐஜி வனிதா, எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் இரவு பொக்லைன் ஏற்றி சென்ற லாரி அங்கு பொக்லைனை இறக்கிவிட்டு நேற்று காலை திரும்பி வந்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜமீன் அருகே நேற்று பிற்பகல் 2 மணியளவில் லாரி டிரைவர் வெயில் காரணமாக சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்பக்கம் பயங்கர சத்தத்துடன் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. மோதிய வேகத்தில் கார் லாரியின் அடியில் சுமார் நான்கடி உள்ளே சென்று சிக்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனைவருமே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, லாரியின் அடியில் சிக்கிய காரை கிரேன் உதவியால் வெளியே இழுக்க முயன்றனர்.சுமார் அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கார் சற்று வெளியே எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த 2 ஆண்களை போலீசார் சடலமாக மீட்டனர். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து போலீசார் விவரங்களை சேகரிக்க முயன்றனர்.அப்போது காரில் வந்தவர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்சாவல் ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த தேஷ்முக் என்பது தெரியவந்தது. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு அமைச்சரின் உதவியாளரின் சகோதரர் எனவும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காரில் வந்தவர்கள் வைத்திருந்த பைல்களை பத்திரமாக மீட்டனர். சடலங்களை சுமார் 2 மணி நேரம் போராடி கடப்பாரையால் கதவுகளை உடைத்து மீட்டனர். இதில் 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என 7 பேரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாவுக்காக பெங்களூரு வந்ததும், பெங்களூரில் இருந்து வேலூருக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது இந்த விபத்து நடந்திருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர்கள் யார், அவர்கள் தேஷ்முக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே விபத்து நடந்த இடத்திற்கு டிஐஜி வனிதா, எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

Tags : car crash ,Larry ,Ambur ,
× RELATED லாரி ஓட்டி நடிக்க கஷ்டப்பட்டேன் -கார்த்தி