×

கூலி உயர்வு குறித்து ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

திருச்செங்கோடு, மே 3:  குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னை குறித்து, ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் பகுதியில் இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால், 400க்கும் மேற்பட்ட  விசைத்தறி  கூடங்கள்  இயங்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு  விசைத்தறி தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கூலி  உயர்வு குறித்த  பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.  நேற்று,  திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட  விசைத்தறி  தொழிலாளர்கள்  வந்தனர். அவர்கள் கூலி உயர்வு  குறித்து தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை  நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஆர்டிஓ மணிராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ., திங்கட்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

இதுகுறித்து குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கத்தின் மாநில  பொறுப்பாளர் நடராஜ் கூறுகையில், ‘குமாரபாளையம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு,  அப்போதைய கலெக்டர்  தட்சிணாமூர்த்தி தலைமையில் ஒப்பந்தம்  போடப்பட்டு, கொடுக்கப்பட வேண்டிய  20 சதவீத கூலி உயர்வை, தற்போது வரை  ஜவுளி ஊற்பத்தியாளர்கள்,  விசைத்தறி  உரிமையாளர்கள் கொடுக்கவில்லை. கூலி  உயர்வு கேட்டு போராடி வரும் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜன்,  தண்டபாணி, சுப்ரமணி  உட்பட 9 பேர்  மீது, போலீசார் பொய் வழக்கு போட்டு  போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.  ஏற்கனவே நடந்த  பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால்,  அரசு தரப்பில் முத்தரப்பு   பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி, ஆர்டிஓவிடம் மனு கொடுத்தோம்,’ என்றார்.  

Tags : negotiations ,RDO ,
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...