×

பழைய பாடத்திட்டத்தில் இறுதி வாய்ப்பு பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, மே 3:  பழைய பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுத தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள் மற்றும் 2018 மார்ச், ஜூன் பருவத்தேர்வுகளில் பிளஸ்1 வருகை புரியாத, மார்ச் 2019 பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்விற்கு வருகை புரியாதவர்கள் ஆகியோர், நடைபெறவுள்ள ஜூன் 2019 மேல்நிலை பிளஸ் 2, பிளஸ்1 (பழைய பாடத்திட்டம்) சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதில், ஜூன் 2019 பிளஸ்1 (பழைய பாடத்திட்டம்), பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று(3ம் தேதி) முதல் வருகிற 8ம் தேதி பிற்பகல் 5.45 மணி வரை நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் சென்டர் மூலம் விண்ணப்பிக்க இயலாது. மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வினை(பழைய பாடத்திட்டத்தில்) எழுதி தேர்ச்சி பெறாதோர், வருகை புரியாதோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத ஜூன் 2019 சிறப்பு துணைத்தேர்வே இறுதி வாய்ப்பாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வை பழையப் பாடத்திட்டத்தில் எழுதவும், பழைய நடைமுறையின்படி(மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வு எழுதியவர்களுக்கும் தேர்வெழுத ஜூன் 2019 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும். ஜூன் 2019 பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு, வரும் ஜூன் மாதம் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், பிளஸ் 1 (பழைய மற்றும் புதிய பாடத்திட்டம்) சிறப்பு துணைத்தேர்வு வரும் ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் நடைபெறும்.

ஜூன் 2019 இடைநிலை, பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம். தனித்தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ50, இதர கட்டணம் ரூ35 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ50 சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து, தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Individuals ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!