×

ஆட்டையாம்பட்டி அருகே குழாய் பழுதால் பனை மரம் உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்: கூட்டுக்குடிநீர் திட்ட வெள்ளோட்டத்தில் பரபரப்பு

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே குடிநீர் குழாய் பழுதால் பனை உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மேட்டூரிலிருந்து தனி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் பைப்லைன் அமைக்கும் பணி முழுமையடைந்த நிலையில், நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. மேட்டூர் அணை பகுதியில் இருந்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்ட தண்ணீரை குழாய் வழியாக அனுப்பி பரிசோதிக்கப்பட்டது.அப்போது, ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி துவக்கப்பள்ளி பகுதியில் மதியம் 2 மணியளவில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. குபு குபுவென வெளியேறிய தண்ணீர், திடீரென பீய்ச்சி அடிக்கத் தொடங்கியது. தண்ணீர் எடுத்துச்செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் பிடி விலகியதால் சிறிது நேரத்தில் பனை மரம் உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. மேலும், அங்கிருந்த டிரான்ஸ்பாரத்தின் மீது கொட்டிய தண்ணீர் வெள்ளம்போல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், குழாயை சரியாக பொருத்தாததால் கசிவு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நீரோட்டம் முற்றிலும் குறைக்கப்பட்டு 2 மணி நேரத்தில் குழாய் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளோட்டம் நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது….

The post ஆட்டையாம்பட்டி அருகே குழாய் பழுதால் பனை மரம் உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்: கூட்டுக்குடிநீர் திட்ட வெள்ளோட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Attaiyampatti ,Attayampatti ,Attiyampatti ,
× RELATED ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம்...