×

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

தர்மபுரி, மே 3: தர்மபுரி அருகே போக்சோ சட்டம் குறித்து, விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் எபிரான் தொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. ஷைன் தாமஸ் வரவேற்று பேசினார். தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, வழக்கறிஞர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்கள் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் பேசியதாவது:

பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதில், தமிழக அளவில் முதல் 10 இடங்களுக்குள்  தர்மபுரி மாவட்டம் உள்ளது. போக்சோ சட்டத்தின்படி, 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் ஆவர். பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் நிலை தொடர்ந்தால், வரும் 2025ல் ஐந்து பெண்களுக்கு ஒரு ஆண் என்ற நிலை ஏற்படும். பெண்களுக்கு எதிரான வன்முறை குடும்பத்தில் தான் அதிகமாக நடக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளை, பெண்கள் வெளியே சொல்வதில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் குறித்து சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், தற்போதைய காலத்திற்கு ஏற்ப, பாலியல் வன்முறை குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவே, போக்சோ சட்டம் கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக பயன்படுத்தி, குழந்தைகளை வன்முறையில் இருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா