×

பானி புயல் எச்சரிக்கை ஆழ்கடல் சென்ற குமரி விசைப்படகுகள் கரை திரும்பின

குளச்சல், மே 3: பானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன.
குளச்சல்  ஆழ்கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட  கட்டுமரங்களும் உள்ளன. விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று 10 முதல் 15 நாட்கள்  தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம். கடந்த வாரம் பானி புயல்  எச்சரிக்கையை அடுத்து குளச்சல் விசைப்படகு சங்கத்தினர் ஆழ்கடல் சென்ற  படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசைப்படகுகள் பாதியில் மீன்பிடி  தொழிலை நிறுத்திவிட்டு கரை திரும்பின. இவை குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த வாரம் மீன்பிடித்து கரை திரும்பிய  விசைப்படகுகள் புயல் எச்சரிக்கை செய்யப்பட்டதால் மீண்டும் மீன்பிடிக்க  செல்லவில்லை. அந்த படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து  விசைப்படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் குளச்சல் மீன்பிடி  துறைமுகத்தில் படகுகள் நிறுத்த இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேப்போன்று கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்திலும் புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால்  மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் கரையை  கடந்ததும் படகுகள் வழக்கம்போல் கடலுக்கு செல்லும் என  விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படகு சேவை ரத்து
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது பானி புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை முதல் கன்னியாகுமரியில் பலத்த காற்று வீசியது. இருப்பினும் 8 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் படகு சேவை தொடங்கியது. ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது. பகல் 12 மணியளவில் சூறைக்காற்றுடன், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக படகு சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : shore ,
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு