×

நாகர்கோவிலில் 4 மையங்களில் ‘நீட்’ தேர்வு குமரியில் 3972 பேர் எழுதுகின்றனர்..

நாகர்கோவில், மே 3: வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் 5ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 நகரங்கள் உட்பட  நாடு முழுவதும் 154 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. குமரியில் 4 தேர்வுமையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.நாகர்கோவிலில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் 1020, பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி 1020, ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி 912, புனித சேவியர் பொறியியல் கல்லூரி 1020 என்று 3972 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவற்றில் தமிழ் மொழியில் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலும், கடைசி நேரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அருகில் உள்ள மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

முறைகேடுகளை தடுக்க இம்முறையும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோமெட்ரிக் பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. கைப்பை, கேமரா, காதணிகள், வளையல்கள், மொபைல் போன், புளூடூத், பென் ட்ரைவ், பேஜர், ஹெல்த் பேண்ட், கை கடிகாரம், ஆபரணங்கள் அணிந்து செல்லவோ, எடுத்து செல்லவோ அனுமதி இல்லை.

அணிந்திருக்கும் ஆடை மென்மையான நிறத்தில் இருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மதச்சார்பான, அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வு அறைக்கு வந்து, ஆசிரியைகளின் சோதனைக்கு உள்ளாக வேண்டும். தேர்வு மையத்தில்  ஷூ அணிய அனுமதி இல்லை, செருப்பு மட்டுமே அனுமதிக்கப்படும். அவையும் ஹை ஹீல்ஸ் உள்ளதாக இருக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.30க்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறந்திருக்கும். பிற்பகல் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையத்தில் நுழைய அனுமதியில்லை. அதனால், 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று, அவரவர் இருக்கைகளில் அமர்வது நல்லது. ஒவ்வொருவருக்கும் ஓர் இருக்கை ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவெண் ஒட்டப்பட்டு இருக்கும்.

1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால்டிக்கெட் பரிசோதனை நடைபெறும். அப்போது மாணவர்கள் ஹால்டிக்கெட், போட்டோ ஐடியைத் தர வேண்டும். நீட் ஹால்டிக்கெட், விண்ணப்பத்தில் பதிவுசெய்த புகைப்படத்தின் அதே நகல், செல்லத்தக்க போட்டோ அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும். வருகைப் பதிவுத் தாளில், மாணவர்கள் தங்கள் விரல் ரேகைகளைப் பதிய வேண்டும்.

 பிற்பகல் 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு வழங்கப்படும். பிற்பகல் 1.50 மணி முதல் 2.00 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவுசெய்ய வேண்டும். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத்தாள் தொகுப்பில் முதல் பக்கம் எத்தனை பக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அத்தனை பக்கங்கள் இருக்கிறதா என்று சரி பார்த்து இல்லையெனில் அறைக் கண்காணிப்பாளரிடம் விபரம் தெரிவிக்க வேண்டும். வினாத்தாளில் உள்ள குறியீடும், விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒரே குறியீடுதான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத வேண்டும். மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை.

Tags : Nagercoil ,centers ,Neat ,Kumari ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...