×

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறை மாணவர்கள், வீரர்கள் அவதி..

நாகர்கோவில், மே 3: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி, கூடைப்பந்து, இறகு பந்து, கையுந்து பந்து மற்றும் தடகள போட்டிக்காக மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் தினசரி பயிற்சி பெற்று வருகின்றனர். இது தவிர காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சி செய்ய அதிகமான பொதுமக்கள் வருகின்றனர். மேலும் ஆண்களுக்கான ஜிம் வசதியும் உண்டு.

இதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு துறையில் ஆர்வமிக்க மாணவிகள் தங்கி பயில மாணவியர் விடுதியும் உள்ளது. உள்அரங்க விளையாட்டு கூடங்களும் உள்ளன. இதன் வருவாய்க்காக  பல கோடி மதிப்புள்ள கடைகளும் விளையாட்டரங்கத்தின் வெளிப்பகுதியில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், விளையாட்டரங்கத்தில் போதுமான  கழிவறை வசதி, சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி  என்பது அறவே இல்லை.  அடிப்படை வசதிகள்தான் இல்லை என்றாலும், இங்கு பயிற்சி பெற போதுமான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லை.

நீச்சல், தடகளம், கால்பந்து மற்றும் பளுதூக்குதல் ஆகிய 4 பிரிவுகளில் மட்டுமே பயிற்சியாளர்கள் உள்ளனர். இதர விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லை. அவர்களுக்கு தகுதி வாய்ந்த கோச்சுகளுக்கு பதில்,  முன்னாள் விளையாட்டு வீரர்களே பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது.  உள்அரங்க விளையாட்டான குவாஷ்க்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பயிற்சியாளர்கள் இல்லை என்பதால், அந்த அரங்கம் பூட்டியே கிடக்கிறது. இதுபோல், யோகா, டேபிள் டென்னிஸ், ஜிம்மிலும் பயிற்சியாளர்கள் இன்றி பூட்டியே கிடக்கின்றன.

இதுபற்றி அண்ணா விளையாட்டரங்க நலச்சங்க செயலாளர் ஜெயின்ஷாஜி  கூறியதாவது: தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றவர்களுக்கு கூட நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் முறையான பயிற்சி அளிப்பதில்லை. தனியாக பணம் தருபவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர். விளையாட்டரங்க விடுதி மாணவர்களுக்கான உபகரணங்களை பணம் தரும் மாணவர்களுக்கு வழங்குகின்றனர். 

அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுன் லெட்சுமி புரத்தை சேர்ந்த கிரேசியா மெர்லின் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் தமிழக முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். ஜப்பான் சர்வதேச இளநிலை பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும், சாதனை படைத்துள்ளார்.  ஆனால், அவருக்கு அண்ணா விளையாட்டரங்கில்  பயிற்சி அளிக்கப்படவில்லை. 

சர்வதேச தடகள போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஹாங்காங் செல்கின்றனர். இதில் ஒரு மாணவி மட்டும் தங்கும் விடுதியை சேர்ந்தவர். மீதி 2 பேர் வெளியில் பயிற்சி பெற்றுள்ளவர்கள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவச மாக தரமான உணவுகள், கல்வி வசதி மற்றும் உபகரணங்கள் தந்தும், பயிற்சியாளர்கள் ஆர்வமின்மை யால் ஒரு மா ணவி மட்டுமே சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே விளையா ட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் முறையாக பயிற்சி அளிக்காத பயிற்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவ சியம்.    இவ்வாறு அவர் கூறினார்.

சொற்ப வாடகை உயர்த்தப்படுமா?
விளையாட்டரங்கில் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட கடைகள்  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மு்லம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் குறைந்த பட்ச தொகைக்கு ஏலம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விளையாட்டரங்க அலுவலகம் கீழ்பகுதியில் உள்ள கடைகள் மாதம் ரூ.60 லிருந்து ரூ.100 வரையே வாடகை தருவதாக கூறப்படுகிறது.

விளையாட்டரங்கம் திறக்கப்பட்டபோது, அப்போதைய கலெக்டரின் பரிந்துரையில், எவ்வித ஒப்பந்தமும் இன்றி முக்கிய பிரமுகர்களுக்கு கடைகளை வழங்கியதால், தற்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என விளையாட்டரங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் தனியார்கள் சிலர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோடி கணக்கில் இந்த கடைகளை வைத்து வருவாய் ஈட்டியுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி போன்று இங்கும், அதிரடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagarcoil ,Anna Stadium ,
× RELATED அண்ணா விளையாட்டரங்கில் வீணாக கிடக்கும் ₹1.25 கோடி உயர் கோபுர விளக்குகள்