×

முசிறி கைகாட்டியில் சாலை விதிமீறலை கண்காணிக்க சிசிடிவி கேமரா டிஎஸ்பிக்கு மக்கள் கோரிக்கை

தா.பேட்டை, மே 3:  முசிறி நகரின் பிரதான பகுதியாக திகழ்வது கைகாட்டி ஆகும். இங்கிருந்து நாமக்கல் கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் சென்று வருகிறது. இதுதவிர முசிறி கைகாட்டி வழியாக திருச்சி-நாமக்கல் ரோட்டில் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. பல நேரங்களில் போக்குவரத்து போலீசார் இல்லாத சமயங்களில் பெரும் வாகன நெரிசல் ஏற்படுவது உண்டு. இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் மற்றும் சில பேருந்துகள் அவ்வப்போது வாகன விதிமீறல்களில் ஈடுபடுவது உண்டு. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முசிறி டிஎஸ்பி சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முசிறியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில், முசிறி கைகாட்டி என்பது நகரின் பிரதான பகுதி ஆகும். திருச்சி நாமக்கல் சாலையில் தினசரி பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும் பேருந்துகளும் சென்று வருகிறது. மேலும் பைக், மொபட்டுகளிலும் அதிகம் பேர் பயணிக்கின்றனர். முசிறி கைகாட்டி பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை வேலைகளில் பரபரப்பாக காணப்படும். பல நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி பயணிக்கின்றனர். பேருந்துகளும் சில நேரங்களில் விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. இவற்றைக் கண்காணித்து சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வசதியாகவும், சங்கிலி திருட்டு பிக்பாக்கெட் மற்றும் தவறான நபர்கள் முசிறி கைகாட்டியில் நடமாடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா கைகாட்டி பகுதியில் பொருத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் திருச்சி. நாமக்கல். துறையூர் சாலை வழியாக விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் நபர்களை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராவில் பதிவு உதவியாக இருக்கும். நகரின் பிரதம பிரதான போக்குவரத்து இடமாக திகழும். கைகாட்டியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எவரும் பொருட்படுத்தவில்லை. சாலை விதிமீறல்கள் தவறான நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக அவசியம் சிசிடிவி கேமரா பொருத்த முசிறி டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றார்.

Tags : CCTV ,Musiri Kikatti ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...