×

ரங்கம் சித்திரை தேர்திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் நூதன வழிபாடு

மண்ணச்சநல்லூர், மே 3:   திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கு முதல் நாளான நேற்று மண்ணச்சநல்லூர் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டும், நீர் ஆதாரம் பெருக வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் செய்து மாட்டு வண்டிகளில் வந்து தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் சிறப்பும் வாய்ந்தது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயில் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று பாடாலூர், வாழையூர், சனமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள்  பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகள் பூட்டி ஸ்ரீரங்கம் சென்றனர்.

மழை பெய்ய வேண்டும், நீர் ஆதாரம் பெருக வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், கிராம பகுதிகளில் வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும், நோய் நொடியின்றி மக்கள் சுபிட்ஷமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு வேண்டுதல்களை முன் வைத்து விவசாயிகள் தங்கள் வழக்கப்படி தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

Tags : festival ,Thirangal ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...