×

துறையூர் அருகே 100 நாள் வேலைக்கு சென்ற பெண் மாரடைப்பால் சாவு

துறையூர், மே 3: துறையூர் அருகே 100 நாள் வேலை பணியிலிருந்த பெண் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். துறையூர் அருகில் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் நேற்று 100 நாள் வேலை நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் அட்டையை கொடுத்து வேலைக்கு தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இதில் சிங்களாந்தபுரம் புதிய வீட்டு குடியிருப்பு வாரியத்தில் வசித்து வரும் மோகன் மனைவி காந்திமதி(55) என்பவர் நேற்று வேலைக்கு அட்டையை கொடுத்துவிட்டு கருப்புக்கோயில் அருகில் வாரியில் வேலை செய்து வந்தார். அப்போது திடீரென காந்திமதி நெஞ்சு வலிப்பதாக கூறினார். பின்னர் உடனே அதே இடத்தில் மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்த பணிதள பொறுப்பாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தார். காந்திமதியை உடனே ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார். இது பற்றி சிங்களாந்தபுரம் ஊராட்சி செயலர் செல்லதுரை துறையூர் ஊராட்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தேசிய ஊராக வேலை உறுதித் திட்டம்) குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். 100 நாள் வேலையில் காந்திமதி நெஞ்சவலியால் இறந்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி