×

திருப்பைஞ்சீலி கோயிலில் அப்பர் சுவாமிகள் திருக்கட்டமுது விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மண்ணச்சநல்லூர், மே 3: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி கோயிலில் அப்பர் திருக்கட்டமுது விழா நடைபெற்றது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயில். சமய சுவாமிகளில் ஒருவராகிய அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகள் பல்வேறு சிவ தலங்களுக்கும் சென்று அங்கு சிவபெருமானை போற்றி பாடல்கள் பாடி வந்தார். அவ்வாறு ஒருமுறை  திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரரை தரிசிக்க காவிரி ஆற்றை கடந்து திருப்பராய்த்துறையில் இருந்து திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். காட்டு பாதை வழியாக சென்றதால் அவருக்கு களைப்பும், பசியும் ஏற்பட்டது. களைப்பு மேலோங்கியதால் அப்பகுதியில் தென்பட்ட ஒரு குளிர்ந்த சோலையில் தங்கினார்.

இதை உணர்ந்த நீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் வேடம் பூண்டு பொதிச்சோற்றுடன் (கட்டுச்சோறுடன்) அப்பர் சுவாமிகள் முன்னே சென்றார். களைப்புற்றிருந்த அப்பருக்கு கட்டமுது வழங்கி அதை சாப்பிட்டு அங்கே தடாகத்தில் இருந்த நீரை அருந்தி களைப்பாறும்படி அப்பரிடம் கேட்டுக்கொண்டார். அப்பர் பசியாறியதும் அவரிடம் எங்கே போகிறீர் என்று வினவ அப்பர் தான் திருப்பைஞ்ஞீலி நாதரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். அதற்கு அந்தணர் வேடம் பூண்ட சுவாமிகள் நானும் அங்கேதான் செல்கிறேன் வாருங்கள் செல்லலாம் என்று கூறி சுவாமிகள் முன்னும், அப்பர் பின்னும் செல்ல கோயில் நுழைவாயில் சென்றவுடன் சுவாமிகள் மறைந்து விட்டார்.

அப்போதுதான் தனது பசியை போக்கியது சிவபெருமான் என்பதை அப்பர் உணர்ந்தார். இதை நினைவுப்படுத்தும் வகையில் அப்பருக்கு சிவபெருமான் கட்டமுது வழங்கியதாக கருதப்படும் இடத்தில் ஆண்டு தோறும் கட்டமுது விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருக்கட்டமுது விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை கோயிலிருந்து நீலிவனேஸ்வரர் புறப்பாடு அடைந்து அப்பர் இளைப்பாறியதாக கருதப்படும் சோலைக்கு எழுந்தருளினார். பின்னர்  நீலிவனேஸ்வரர் அப்பருக்கு திருக்கட்டமுது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நீலிவனேஸ்வரரும், அப்பர் சுவாமிகளும் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : devotees ,festival ,Tirupati Swamigal ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...