×

பாண்டுகுடி பாலத்தில் வாகனவிபத்துக்களை தடுக்க தடுப்புசுவர்அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர், மே 3: கூத்தாநல்லூர் அருகே பாண்டுகுடி பாலத்தில் விபத்துக்களை தவிர்க்க பாலத்தில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வழியாக ஓடும் வெண்ணாறு பாண்டுகுடி அருகே இரண்டாக பிரிகிறது. அதில் பிரியும் கிளைநதி அதிவீரராமனாறு என்கிற பெயரோடு வேறு பகுதிகளுக்கு பாய்கிறது. அப்படி இரண்டாக பிரியும் வெண்ணாற்றின் மீதும் அதிவீர ராமனாற்றின் மீதும் பொதுவான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் ஒருபகுதி வடபாதிமங்களம் , தண்ணீர்குன்னம், சேந்தங்குடி ஆகிய பகுதிகளுக்கு சாலைவசதியையும் , அந்த சாலையைக்கடந்து கூத்தாநல்லூர் செல்வதற்குமான  சாலையும் இணைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இரண்டாக பிரியும் வெண்ணாறு உள்ளது. இந்த நிலையில் வெண்ணாறு பிரியும் இடத்தில் பாலத்தின்மீது எந்தவிதமான பாதுகாப்புச் சுவரும் இலலாத நிலையில் பாலம் உள்ளது. அதனால் சாலையில் வரும் வாகனங்கள் கவனக்குறைவாக நேராக சென்றால் ஆற்றில் விழுந்து விடும் அபாயம் உள்ளது.

குறிப்பாக தண்ணீர்குன்னம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நேர் எதிராக ஆறு அமைந்திருப்பதால் மிகவும் ஆபத்தை உருவாக்கும் நிலை ஏற்படும். எனவே வெண்ணாறும் அதிவீரராமனாறும் பிரியும் இடத்தில் தண்ணீர்குன்னம் சாலை துவங்கும் அக்கரைப்புதூரில் விடுபட்ட இடத்தில் பாதுகாப்புச்சுவர் எழுப்பி வாகன விபத்துக்களை தடுக்க பொதுப்பணித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் முயற்சி எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : vehicle leaks ,Bandu Kodi Bridge ,
× RELATED திருவாரூர் மாவட்ட கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 25 கிமீ தூரம் தூய்மை பணி