மன்னார்குடி கோட்டூரில் புயலால் சேதமடைந்த பேருந்து நிலைய மேற்கூரையை சீரமைக்காத அவலம் பொதுமக்கள் போராட்டம் அறிவிப்பு

மன்னார்குடி, மே 3: மன்னார்குடி கோட்டூரில் கஜா புயலால் சேதமடைந்த பேருந்து நிலைய மேற்கூரை இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் அடித்த கஜா புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. குறிப்பாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளும் புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. புயலின் கோரப்பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஒன்றியம் முழுவதும் ஏராளமான ஊர்களில் புயலின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அரசுக்கு சொந்தமான அங்கன் வாடி கட்டிடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், பேருந்து நிறுத்தங்கள் என  பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பெரும்பாலான  கட்டிடங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில்  கோட்டூர் காவல் நிலையம் அருகில் கடந்த 2008ம் ஆண்டு தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.8.17 லட்சம் மதிப்பில்  மேற்கூரையுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையத்தை கோட்டூர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள 20 ஊராட்சிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கோட்டூரில் இருந்து மன்னார்குடி, திருவாரூர்,  திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கம்பீரமாக நின்ற பேருந்து நிலையமும் கஜா புயலின் கோரத் தாண்டவத்தில்  இருந்து தப்பிக்கவில்லை. புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பேருந்து நிலையத்தின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் ஆன மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது.  புயல் கடந்து 5 மாதங்கள் ஆகியும் சேதமடைந்த பேருந்து நிலைய மேற் கூரை  இன்று வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் மக்கள் வேதனையில் உள்ளனர். பாதி மேற்கூரையுடன் நிற்பதால்  இந்த பேருந்து நிலையத்தில் பஸ் ஏற காத்திருக்கும் மக்கள் தங்களின் உயிரை கையில் பிடித்தபடியே நிற்பது ஆபத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

பேருந்து நிலையத்தை சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் பொதுமக்கள்  பலமுறை எடுத்துக் கூறியும் பலனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி தேவையான நிதியினை ஒதுக்கி  கோட்டூர் பேருந்து நிலையத்தை சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  கோட்டூர்  ஒன்றிய செயலாளர் மாரிமுத்து கூறுகையில்,

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலைய மேற்கூரை கஜா புயலால் சேதமடைந்து 5 மாதங்களை கடந்தும் அதனை சீரமைக்க வேண்டிய அதிகாரிகள் நிர்வாகத்திடம் போதிய நிதியில்லை என கையை பிசைவது ஏற்புடையதல்ல. கஜா புயல் சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படாததால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கு வாக்குகள் சேகரிக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டூரில் சேதமடைந்து கிடக்கும் பேருந்து நிலையத்தின் அருகில்  நின்று கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போதாவது சேதமடைந்த மேற்கூரையை அதிகாரிகள் சீரமைப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அதிகாரிகள் வழக்கம் போல் வேடிக்கை பார்த்ததோடு தங்களின் கடமையை முடித்து கொண்டனர். எனவே இனியும் காலதாமதப்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நிதியினை ஒதுக்கி பேருந்து நிலையத்தை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும். மாறாக  தொடர்ந்து அதி காரிகள்  அலட்சியம் காட்டினால் மக்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றார். ஆன்லைன் மருந்து வணிகம்
தடை செய்ய வேண்டும்

Tags : Announcement ,Civil Disobedience Campaign ,Mannargudi ,
× RELATED 10 சதவீத போனஸ் அறிவிப்பால் அரசு ரப்பர்...