×

தேர்தல் பிரிவு டி.ஜி.பி., அசுதேஷ் சுக்லா ஆலோசனை

சூலூர், மே 3:  சூலூர் இடைத்தேர்தல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்  சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் பிரிவு டிஜிபி., அசுதோஷ்சுக்லா தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு காவல் துறை தலைவர் ஷேசாயி ,மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரன், கோவை மாவட்ட எஸ்பி., சுஜித்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழி உட்பட அதிகாரிகள்  பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து அசுதேஷ் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற அறிக்கை கொடுத்துள்ளது தொடர்பான கேள்விற்கு பதில் அளிக்க முடியாது. சூலூர் தொகுதியில் 4123 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகின்றது. இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பணம் கொடுப்பது தொடர்பான புகார்கள் இருந்தால்  1950 என்ற எண்ணிக்கு தகவல் தெரிவிக்கலாம். சூலூரில் 66 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கான செயல்களை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், பணம் கொடுப்பதை தடுக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும். சூலூர் பகுதிகளில் தனியார் பள்ளிகளில் அரசியல் கட்சியினரை தங்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு தங்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சூலூர் தொகுதியில் மட்டும் இதுவரை தேர்தல் தொடர்பாக  4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் தொடர்பாக இதுவரை  4723 வழக்குகள் பதியப்பட்டுள்ளது,’ என்றார். அப்போது தேர்தல் பிரிவு ஜ.ஜி., சேசாயி, காவல் துறை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா