×

பிஏபி கால்வாய் சீரமைக்க நிதி ஒதுக்கீடு இல்லை

உடுமலை, மே 3:  பிஏபி பிரதான கால்வாய் சீரமைக்க மண் பரிசோதனை முடிந்து ஓராண்டாகியும் நிதி ஒதுக்கீடு செய்யாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து, பிஏபி., திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையில் துவங்கும் பிஏபி., பிரதான கால்வாய், வெள்ளகோவில் வரை சுமார் 127 கிமீ., தூரம் செல்கிறது.

பழமையான இந்த கால்வாயில் பல இடங்களில் சிலாப்புகள் சரிந்தும், மண் குவிந்தும் இடையூறு ஏற்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. அவ்வப்போது பொதுப்பணித்துறை சார்பில், கால்வாயில் பழுது ஏற்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டாலும் மீண்டும், மீண்டும் சேதமடைகின்றன. குறிப்பாக, கால்வாயின் 1.2 வது கிமீ., தூரமான பங்களாமேட்டில் இருந்து 5.6 வது கிமீ., தூரமான தீபாலபட்டி வரை கரிசல்பூமியாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

இதனையடுத்து மண் தன்மைக்கு ஏற்ப கால்வாயை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் சென்னையில் இருந்து வந்த மண் ஆய்வு குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர். கால்வாயின் சரிவுப்பகுதி, கரையோரம், நடுப்பகுதி என கால்வாய் நெடுகிலும் பங்களாமேடு முதல் தீபாலபட்டி வரை 25 இடங்களில் மண் மாதிரி எடுக்கப்பட்டது. இந்த மண்ணை சென்னைக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் மண் மாதிரி எடுத்து ஓராண்டாகியும் இதுவரை அதன் முடிவு அறிவிக்கப்படவில்லை. கால்வாய் சீரமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், மண் பரிசோதனை துவங்கியதும் விரைவில் கால்வாய் சீரமைக்கப்பட்டு, நீண்ட காலமாக நீடிக்கும் கடைமடைக்கு தண்ணீர் வராத பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஓராண்டாக எந்த தகவலும் இல்லை. இதனால் கடைமடை பகுதி விவசாயிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். உடனடி நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும், என்றனர்.. அவர்கள் தெரிவித்தனர்.

Tags : PAP ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று நிறைவு