×

பொத்துமரத்து ஊரணியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி, மே 3: சிவகாசி பொத்துமரத்து ஊரணியில் கடைகள் அதிகரித்து வருவதால் ஊரணி சுருங்கி வருகிறது. ஊரணியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படைந்து வருகிறது. ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி பகுதியில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க கண்மாய், குளங்கள், தெப்பங்களை அமைத்துள்ளனர். இந்த நீர்நிலைகளில் மழைநீர் கேரிக்கப்பட்டு வந்ததால் நிலத்தடி நீராதாரம் அதிகரித்து வந்தது. போர்வெல் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பல தெப்பங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணமல் போய்விட்டது. இதனால் சிவகாசியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் சிவகாசி நகரின் மைய பகுதியில் உள்ள பொத்துமரத்து ஊரணியில் வேன்ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இந்த ஊரணியில் மரங்கள் அடர்ந்து முளைத்திருந்தன. இதனால் நகரின் மைய பகுதியில் குளிர் தரும் சோலைவனம் போல் ஊரணி இருந்து வந்தது.

நகராட்சி முன்னாள் தலைவர் கதிரவன் இந்த ஊரணியில் உள்ள வேன் ஸ்டாண்ட்டை அகற்றி ஊரணியை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பல லட்சம் மதிப்பில் ஊரணியில் முளைத்திருந்த முட்செடிகள், படர் தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே பொத்துமரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணியின் போது மழை காரணமாக ஊரணியில் தணணீர் நிரம்பியது. இதனால் ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் பொத்துமரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணியை நகராட்சி நிர்வாகம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் ஊரணி கரையில் பூக்கடை, டீக்கடை, கோயில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். சிவகாசி நகராட்சி பகுதி குடிநீர் ஆதராமான பெரியகுளம், சிறுகுளம் கண்மாய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரம்பவில்லை.

இந்த கண்மாய்களின் நீர்வரத்து கால்வாயில் கட்டிடங்கள், வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த கண்மாய்கள் எப்போதும் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் சிவகாசி நகரில் கோடை காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் கோடை காலங்களில் போர்வெல் கிணறுகளிலும் நீர் வற்றிவிடுகிறது. இதுபோன்ற கால கட்டங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் நகரில் உள்ள நிலத்தடி நீராதார ஊரணிகள், கண்மாய்கள், தெப்பங்களை மீட்டு பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வருதில்லை. பொத்துமரத்து ஊரணியில் நாராணாபுரம், போஸ்காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் ஊரணி மாசடைந்து வருகிறது. கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், ஊரணி கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ஆழப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pottu Ramadu ,
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...