×

விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை

* குண்டும், குழியுமான சாலைகள்
* மலைேபால் குவியும் குப்பைகள்
* வாறுகாலில் கழிவுநீர் தேக்கம்

விருதுநகர், மே 3: விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சி பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து அடிப்படை வசதிகள் அறவே இல்லாமல் உள்ளது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சி பகுதியில் லட்சுமிநகர், பெத்தனாட்சிநகர், புல்லலக்கோட்டை சாலை மூன்று பகுதிகளில் சுமார் ஆயிரத்தி ஐநூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகர் விரிவடைந்து வரும் வேளையில் இந்தப் பகுதிகளில் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மன்பு சாலை போடப்பட்டது. இவ்வழியாக தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று, வருகின்றன.
தற்போது இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடந்த 3 வருடத்திற்கு முன்புதான் சாலை பராமரிப்பு என்கிற பெயரில் ஆங்காங்கே சாலையில் ஒட்டுபோடும் பணி நடைபெற்றது. ஆனால் அதுவும் ஓரிரு மாதங்களில் மீண்டும் பள்ளங்களாய் மாறி வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

சாலையில் உள்ள பள்ளங்களில் மழை காலத்தில் நீர் தேங்கி விடுவதால் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருவோர் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து குப்பைகள் பெறப்படுவதால் அதிக குப்பைகள் தேங்கிவிடுகிறது. இதனால் பலர் குடியிருப்பு பகுதி அருகிலேயே குப்பைகளை கொட்டிவிடுவதால் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி லட்சுமி நகர் கடைசி தெருவில் இருந்து சித்தர் கோயிலுக்கு செல்லும் சாலை வரை தெருவிளக்குகள் இல்லை. இந்தச் சாலையில் ஓரிரு இடங்களில் இருக்கும் தெருவிளக்குகளும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதேபோல் சிவராமன் நகர், லட்சுமி நகர் பகுதி சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே சேதமடைந்த இந்த சாலைகளை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து தேன்மொழி கூறியதாவது, எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெரியவர் சாலைகளில் இருந்த பள்ளங்களை கவனிக்காமல் கீழே விழுந்து விட்டார். மேலும் சில வாரங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் விஷப்பூச்சிகள் இருவரை கடித்தும் இருக்கிறது என்று கூறுகிறார். மைதிலி கூறுகையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி அருகில் இருக்கக்கூடிய சீமைக்கருவேல மரங்களின் புதர்களுக்குள் சமூகவிரோதச் செயல்கள் நடைபெற்று வருகிறது. காலை எழுந்து பார்க்கும் போது வீட்டிலும் வீட்டிற்கு அருகாமையிலும் அதிகப்படியான மது பாட்டில்கள் கிடக்கிறது. இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இவர்கள் திருட்டு சம்பவங்களையும் செய்யலாம் என்பதால் திருடு போய்விடும் என்கிற பயமும் இருக்கிறது. இதனால் அதிகப்படியான போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார்.

Tags : facilities ,Sivagnanapuram ,panchayat area ,Virudhunagar Union ,
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...