தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர்,அரசு ஊழியர்கள் வாக்களிக்க வலியுறுத்தல்

சிவகங்கை, மே 3: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை வாக்களிக்காத ஆசிரியர், அரசு ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 18ம் தேதி நடந்த தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் ஆயிரத்து 348 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 7ஆயிரத்து 312பேர் பணியாற்றினர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் பணிச்சான்று மற்றும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. தேர்தல் பணிச்சான்று பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குப்பதிவு நடந்த மையங்களிலேயே வாக்களித்து விட்டனர். தபால் வாக்குகள் பெற்றவர்கள் வாக்களிக்க மே 23 காலை 6 மணி வரை கால அவகாசம் உள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 50 சதவீத ஆசிரியர்கள் தபால் வாக்குகளை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். நூறு சதவீத வாக்களிப்பை நிறைவேற்ற பல்வேறு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திய ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகளை அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஜனநாயக கடமையில் இருந்து தவறியதாகி விடும். மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் வாக்குகள் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் அனைவரும் வாக்கு பதிவு மையங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்களித்து விட்டனர். எனவே தபால் வாக்குகள் கைகளில் கிடைக்கப்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கால தாமதப்படுத்தாமல் அவற்றை முறையாக வாக்களித்து, அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று, உரிய உறைகளில் வைத்து அருகில் உள்ள அஞசலகங்கள் மூலம் பணமில்லா பதிவு தபாலில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : author ,government ,
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை