×

இந்த தேர்தலுக்கு எந்த விரலில் ‘மை’...?

ஒவ்வொரு நாட்டிலும் தேர்தலில் பல்வேறு நிலைகள் கடைபிடிக்கப்பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இந்த ‘அடையாள மை’ பயன்படுத்தப்படுகிறது. இந்த அடையாள மையானது, தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படுகிறது. வாக்களித்ததற்கான அத்தாட்சியும் இதுவாகவே அமைகிறது. போலியாக யாரேனும் அந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்து கண்டுபிடித்தால், அவரது இடது கையின் நடுவிரலில் மை வைக்கும் நடைமுறையும் இருக்கிறது. இந்த மை சாதாரணமாக கருத்தப்பட்டாலும், இது ஜனநாயகம் காக்கும் முக்கிய அடையாள வரிசையில் முன் நிற்கிறது. இந்த மை வைக்கப்பட்ட நாளில் இருந்து குறைந்தது 20 நாட்களுக்காவது இந்த மை அழியாது. இதனால் ஒருமுறை வாக்களித்தவர், மறுபடியும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது. இந்த மை தயாரிக்கும் நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் இயங்கி வருகிறது. மைசூர் வண்ணப்பூச்சு மற்றும் வார்னிஷ் லிமிடெட் என்ற இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 1937 ஆம் ஆண்டு மைசூர் மன்னர் நல்வடி கிருஷ்ணராஜ உடையார் இந்நிறுவனத்தை தொடங்கினார்.

இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு, நாட்டுடமை ஆக்கப்பட்டு, 1962ல் மூன்றாவது மக்களவைத் தேர்தலில் அடையாள மை தயாரிக்கும் பணி இந்நிறுவனத்திற்கு தரப்பட்டது. இன்று வரை இந்நிறுவனமே மை தயாரித்து வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்த மை, இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. ஆப்கானிஸ்தான், கம்போடியா நாடுகளிலும் இந்த அடையாள மை பயன்படுத்தப்படுகிறது.
 இந்த மை தயாரிப்பிற்கான பொருட்கள்  என்னென்ன அளவில் கலக்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்படுகிறது. 5 மிலி, 7.5 மிலி, 20 மிலி, 80 மிலி, 500 மிலி பாட்டில்களில் அடைக்கப்பட்டு இவை தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. சுமார் 300 வாக்காளர்களுக்கு 5 மிலி அடையாள மை போதுமானது. சில்வர் நைட்ரேட் வேதிப்பொருள் இதில் முக்கியமானதாகும். விரலில் இடப்பட்டதும், விரல் தோலுடன் வினைபுரிந்து சில்வர் குளோரைடாகிறது. இது நீரில் கரையா தன்மை கொண்டதாகும். இதனை வெந்நீர், ஆல்கஹால், வேதிப் பொருட்கள், நெயில் பாலீஷ் ரிமூவர், பிளீச்சிங் பொருட்கள் என எதனாலும் அழிக்க முடியாது.

விரலில் மை இடப்பட்ட பகுதியில் இருக்கும் தோல் பழையதாகி அகன்று புதிய தோல் வரும் வரை மை மாறாமல் அப்படியே இருக்கும். திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பொதுவாக தேர்தலில் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைப்பது வழக்கம். கடந்த மக்களவை தேர்தலில்தான் இந்த தொகுதி வேட்பாளர்களுக்கு மை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இடைத்தேர்தல் ஒரு மாதம் கழித்து வருவதால் அந்த மை பெரும்பாலும் அழிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அதே விரலில் மை வைக்கலாமா? அல்லது இடது கையின் நடுவிரலில் மை வைக்கலாமா என்பது குறித்த பரிசீலனை நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...