×

மரணத்தால் மட்டுமில்லை கைரேகை காட்டி கொடுத்ததாலும் உருவானது இடைத்தேர்தல்

திருப்பரங்குன்றம் தொகுதியில் போஸ் எம்எல்ஏ மரணத்தால் மட்டும் இல்லை ஜெயலலிதாவின் கைரேகை மோசடியாலும் இடைத்தேர்தல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரபரப்பூட்டும் பின்னணி தகவல்கள் வருமாறு:
தமிழகத்தில் 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜெயித்த சீனிவேல் எம்எல்ஏ பதவி ஏற்காமலேயே மரணம் அடைந்தார். இதனால் 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏகே. போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘போஸ் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அளித்த அங்கீகார கடிதத்தில் அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதிலாக கைரேகை இருந்தது. அப்போது அவர் மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சையில் இருந்தார். இதனால் இந்த கைரேகை அவருடையது இல்லை. எனவே போஸ் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கோரி இருந்தார்.

வழக்கு விசாரணை நீடித்தது. 21 மாதங்களாக எம்எல்ஏவாக போஸ் செயல்பட்டு வந்த நிலையில் 2018 ஆகஸ்டில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 2018 நவம்பரில் இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது. இதனை தள்ளிவைக்க அதிமுக அரசு திட்டமிட்டு நவம்பரில் மழைக்காலம் என்று தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை அனுப்பியது. அதோடு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருப்பதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் தேர்தல் தள்ளி போனது. இந்த சூழலில் உயர்நீதிமன்றம் விசாரணை முடித்து, ‘வேட்பு மனு அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு மோசடியானது, எனவே போஸ் வெற்றி செல்லாது’  என்று தீர்ப்பளித்ததுடன், இந்த தவறுக்கு உடந்தையாக இருந்த முன்னாள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானிக்கும் கண்டனம் தெரிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டுமென திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி நடைபெறாமல் இழுபறி நீடித்தது.

இதற்கிடையே மக்களவை தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதி முடிவுக்கு பிறகு திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலை நடத்த அதிமுக அரசு மேற்கொண்டது. ஆனால் தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலை மே 19ல் அறிவித்தது. இதன்மூலம் அதிமுக மேற்கொண்டு வந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த தொகுதியில் 2016 நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெற்று இரண்டரை ஆண்டில் மீண்டும் இடைத்தேர்தல் உருவாகி உள்ளது. இது போஸ் மரணத்தினால் மட்டும் உருவாகவில்லை. ஏனென்றால் முந்திய இடைத்தேர்தலில் போஸ் வேட்புமனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை மோசடியால், அவரது வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தற்போது போஸ் உயிரோடு இருந்திருந்தாலும் கூட அவர் வெற்றி செல்லாது என அறிவித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்திருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதுவே தொகுதி மக்கள் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : by-election ,death ,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...