×

திருக்காட்டுப்பள்ளி கீழவீதி சாலையில் பள்ளம் சீரமைப்பு

திருக்காட்டுப்பள்ளி, மே 3:  தினகரன் செய்தி எதிரொலியால் திருக்காட்டுப்பள்ளி கீழவீதியிலிருந்து ராயர் அக்ரஹாரத்தெரு பிரியும் இடத்தில் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளம் சீரமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கீழவீதியில் இருந்து ராயர் அக்ரஹார தெருவுக்கு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு வடிகால் சாக்கடை அமைந்துள்ளது. இதன்மேல் சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதை உரிய முறையில் கருங்கல் பலகை போட்டு தரமாக அமைக்கவில்லை. இந்நிலையில் ராயர் அக்ரஹார தெருவின் துவக்கத்தில் உள்ள தனியார் கிடங்கில் பொருட்களை இறக்க கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதனால் பாலம் பலமுறை உடைந்து பள்ளம் ஏற்படுவதும், பேரூராட்சியில் பெயரளவில் சீர்படுத்துவதும் நடந்து வருகிறது. இதுகுறித்து தனியார் கிடங்கு உபயோகிப்பாளரும் கண்டுகொள்வதில்லை. பலமுறை புகார் செய்தும் பேரூராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் கீழவீதியிலிருந்து ராயர் அக்ரஹார தெருவுக்குள் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சாக்கடையை கருங்கல் பலகை போட்டு மூடி அதன்மேல் சாலை அமைத்து சீரமைக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் கடந்த 27ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை சீரமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழையும், விரைந்து நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்தையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...