×

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பொருட்கள் பாதுகாப்பறை ஆக்கிரமிப்பு பயணிகள் திண்டாட்டம்

தஞ்சை,  மே 3: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பறை கடந்த 9 ஆண்டுகளாக  தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால்  பயணிகள் தங்களது பொருட்களை  பாதுகாப்பாக வைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தஞ்சை புதிய  பேருந்து நிலையம் 1995ம் ஆண்டு 8வது உலக தமிழ் மாநாட்டின்போது  துவங்கப்பட்டது. அப்போது வெளியூர்களிலிருந்து தஞ்சை வரும் பயணிகள் தங்கள்  பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின்  மூலம் பயணிகள் பொருள் பாதுகாப்பு வைப்பறை செயல்பட்டு வந்தது. துவக்கத்தில்  நன்றாக செயல்பட்ட நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த வைப்பறை முழுவதுமாக  ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இதனால் பொருட்கள் பாதுகாப்பு வைப்பறை என்ற  அடையாளம் மாறி வியாபார கடையாக மாற்றப்பட்டு விட்டது. இதில் சுவீட்,  குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.  பயணிகள் பொருட்கள் பாதுகாப்பறை என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த  வாசகம் முழுவதும் பெயிண்ட் அடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. இதனால்  வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், பொருட்களை வைக்க முடியாமல்  தவிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் அங்குள்ள நகராட்சி கட்டண  குளியலறைகளில் காலை கடன்களை முடித்து கொண்டு மாற்று உடை உடுத்தி கொண்டு  பொருள்களை பாதுகாப்பு வைப்பறையில் வைப்பார்கள்.

பின்னர் தஞ்சையில் அலுவல்  பணிகளை மேற்கொண்டு விட்டு ஊருக்கு திரும்ப பொருள் பாதுகாப்பு வைப்பறை  மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது வெளியூர் பயணிகள் பைகளை  பாதுகாப்பாக வைக்க பொருள் வைப்பறை தேடி அலைகின்றனர். யாராவது இந்த இடத்தை  கூறினால் அதற்கான அடையாளமே தென்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி  செல்கின்றனர்.  இதுகுறித்து நாகையை சேர்ந்த செந்தில் கூறும்போது, தஞ்சை  புதிய பேருந்து நிலைய குளியலறையில் குளித்து விட்டு உடை மாற்றி கொண்டு  பொருட்களை வைப்பதற்காக பொருட்கள் பாதுகாப்பு அறையை தேடி பஸ் ஸ்டாண்டே  சுற்றி வந்துவிட்டேன். பிறகு இங்கு விசாரித்தபோது அந்த அறை  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் பொருட்களை வைக்க முடியாது என்று கூறினர்.  வெளியூர்களிலிருந்து வரும் என்னை போன்றவர்களால் லாட்ஜ்களில் வாடகைக்கு அறை  எடுத்து தங்கும் அளவுக்கு வசதி கிடையாது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும்  பொருட்கள் பாதுகாப்பறை உள்ளது. ஆனால் இங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது  வேதனையாக உள்ளது என்றார்.ஆளுங்கட்சியினர் துணையுடன் நடக்கும் இந்த  விதிமீறலை கலெக்டர் முதல் கீழ்மட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள்  வரை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் தான்.  அதிகாரிகள் விதிமீறல்களுக்கு துணை போகாமல் மக்களுக்காக நேர்மையாக  செயல்பட்டால் இதுபோன்று நிகழாது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம்,  போக்குவரத்து கழக அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு  பொருள் பாதுகாப்பு அறையை மீட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : passengers ,bus station ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!