×

காரைக்கால் கடற்கரை சாலைகளில் பழுதான மின் விளக்குகளை உடனே சீரமைக்கவேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், மே 3: காரைக்கால் கடற்கரை சாலைகளில் பழுதான மின் விளக்குகளை உடனே சீரமைக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார்.காரைக்காலில் கடலோர கிராமங்களின் பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும், இவை அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கலெக்டர் பேசும்போது, கடலோர மீனவ கிராமங்களின் பாதுகாப்பு குறித்து, மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக் கூடாது. இதனை கடலோரக் காவல்நிலையத்தினர், மீன்வளத்துறையினர் கண்காணிக்கவேண்டும். மீனவர்களுக்கு இதுதொடர்பான சட்டங்களை விளக்கிக் கூறவேண்டும்.

கடற்கரை சாலை, துறைமுகம், மீனவ கிராமங்களின் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் பழுதாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை மாவட்ட மின்துறை விரைவாக சீர்செய்யவேண்டும். உயர்மின் கம்ப விளக்குகள் கடற்கரைப் பகுதியில் பழுதின்றி செயல்பட ஏற்பாடு செய்யவேண்டும். கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்ட இடங்களில், அவை முறையாக செயல்படுகிறதா என்பதை பரிசோதிக்கவேண்டும்.காரைக்கால் கடற்கரைக்கு வருவோருக்கு எந்தவித அச்சுறுத்தலின்றியும், அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்லத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடலில் இறங்கி குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடற்கரைக்கு வருவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றார். கூட்டத்தில், எஸ்எஸ்பி ராகுல் அல்வால், கடலோர காவல்படை காரைக்கால் மைய கமாண்டர் நாகேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை, காவல்துறை, மின் துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Tags : Collector ,beach roads ,Karaikal ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...