×

கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமராவதி பழைய பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




கரூர், மே 3: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து திருமாநிலையூர் வரை உள்ள பழைய அமராவதி பாலத்தை சீரமைத்து, புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருமாநிலையூர் அருகே அமராவதி குறுக்கிடுகிறது. பிற நகரங்களை கரூர் நகருடன் இணைக்கும் வகையில் கடந்த 1924ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.கடந்த 2000ம் ஆண்டில் இந்த பழைய பாலத்தின் அருகே புதிதாக மற்றொரு பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பேருந்து போன்ற கனரக வாகனங்கள் அனைத்தும் புதிய பாலத்தின் வழியாக சென்று வருகிறது. கரூரில் இருந்து திருமாநிலையூர், தாந்தோணிமலை போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் இலகு ரக வாகன ஓட்டிகள் பழைய பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

90 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தின் தடுப்பு கம்பி முதல் சாலை வரை அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பழைய பாலத்தில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. பால சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இதில் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பழமை வாய்ந்த இந்த பாலத்தினை சீரமைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Amaravathi Old Bridge ,area ,Karur Lighthouse Garner ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...