×

கரூர் சர்ச் கார்னர் பகுதியில் செயல்படாத சிக்னலால் பொதுமக்கள் அவதி பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

கரூர், மே 3: கரூர் சர்ச் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சிக்னலை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெங்கமேடு, மண்மங்கலம், வேலூர், நெரூர், வாங்கல், மோகனூர், சோமூர், திருமுக்கூடலூர், தொழிற்பேட்டை, புலியூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் சர்ச் கார்னர் வந்து பல்வேறு சாலைகளில் பிரிந்து செல்கிறது. மிக முக்கியமான சந்திப்பு சாலையாக உள்ள சர்ச் கார்னர் பகுதியில் பேருந்துகள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் இதன் வழியாக நடைபெற்று வருகிறது.

காலை 8மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6மணி வரையிலும் அதிகளவு வாகனங்கள் இந்த கார்னர் வழியாக சென்று வருகிறது. முக்கிய சந்திப்பு பகுதியான இந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் செயல்படும் வகையில் இந்த சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்தில் சிக்னல் இயங்காமல் உள்ளதால், அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சிக்னல் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், சிக்னல் இயங்காத காரணத்தினால் அவ்வப்போது சின்ன சின்ன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து சிக்னல் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : Karur ,area ,Church Corner ,
× RELATED கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி