×

2326 இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி, மே 3:    புதுச்சேரி பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் தகவல் கையேடு நேற்று வெளியிடப்பட்டது. 2326 பாலிடெக்னிக் கல்லூரி  இடங்களுக்கு நேற்று மாலை முதல் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி தலைமை செயலக கருத்தரங்க அறையில்  பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகவல்  கையேட்டினை  சென்டாக் சேர்மன் அன்பரசு வெளியிட, துணை சேர்மன்  பிரசாந்த்குமார் பாண்டா, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, கன்வீனர்  மாணிக்தீபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் சென்டாக்  சேர்மனும், கல்வித்துறை செயலருமான அன்பரசு கூறுகையில், இந்தாண்டு  முன்னதாகவே 6 பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தகவல் கையேட்டினை வெளியிட்டு விண்ணப்பிக்கும் பணியை ஆரம்பித்துள்ளோம்.கடந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே  முதன்முறையாக ஒரு குடையின் கீழ் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆன்லைனில்  விண்ணப்பிக்கும் முறையை கொண்டு
வந்திருக்கிறோம். இதில் சில குறைபாடுகள்  இருந்தபோதிலும் அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வெற்றிகரமாக மாணவர்  கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு அடுத்தபடியாக இந்தாண்டு முதல்  தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பெறப்பட்டு நேரடியாக சென்டாக்  இணையத்தில் பதிவு செய்யப்படும். மாணவர்களுடைய தேர்வு  எண்ணை பதிவு செய்த உடனே  அவர் எடுத்த மதிப்பெண்கள், எந்த பள்ளி என்பது  உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் உடனடியாக தெரிந்துவிடும். இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்  சரிபார்ப்பதற்கான நேரம் மிச்சப்படுத்தப்படும். மொத்தம் உள்ள 6  பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2326 இடங்களுக்கு நேற்று மாலை 5 மணி முதல் மே  15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

  எப்பொழுதும் மே 30 தேதிக்கு பிறகுதான்  விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற நிலையை மாற்றியுள்ளோம். மேலும் இந்த ஆண்டு  புதிதாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடங்கள்  வழங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் சேர்க்கப்படும். பொருளாதாரத்தில்  பின்தங்கியவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குமாறு வருவாய்த் துறைக்கு  ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்  துறையின் சாதி, இருப்பிட சான்றிதழ்களையும் ஆன்லைன் முறையில்  சரிபார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க  சிரமம் இருப்பவர்களுக்கு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் அதற்கான உதவி  மையம் அமைக்கப்படும். அங்கு சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  பொது  சேவை மையத்துக்கும் இந்த சேவையை விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.  இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7 சதவீதமும், 10ம் வகுப்பில் 5  சதவீதம் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தியுள்ளோம். இன்னமும் கல்வித்துறை  முன்னேற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். தேர்ச்சி விகிதம்  அதிகரிக்க காரணம் பெற்றோர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தான். அரசு பள்ளி  மாணவர்களுக்கு சமூக ரீதியாக பல்வேறு பிரச்னைகள் உள்ளது. வறுமை, குடும்ப  பின்னணி, எந்த இடத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை கண்டறிந்து பள்ளிக்கு  வெளியேயும், அவர்களுக்கான பிரச்னைக்கு தீர்வு காண கல்வித்துறை நடவடிக்கை  எடுத்தது.

 குறிப்பாக ஆசிரியர்கள் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம்  கண்டு, சமூக பின்னணியை ஆராய்ந்து பெற்றோர்களையும், சில நேரங்களில் அவர்களது  உடன் பிறந்தவர்களையும் அழைத்து பேசி தீர்வு கண்டதே தேர்ச்சி சதவீதம்  அதிகரிக்க காரணம். தொடர்ந்து அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க  கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும். தனியார் பள்ளிகளை போன்ற  உள்கட்டமைப்பு வசதிகளை அரசு பள்ளிகளில் உருவாக்க சமூக பொறுப்புணர்வு நிதி  மற்றும் அறக்கட்டளைகளின் நிதி உதவியை பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : places ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...