×

புதுச்சேரி முக்கிய சாலையில் வெடித்து சிதறும் இலவம்பஞ்சு

புதுச்சேரி, மே 3:  புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் வெடித்து சிதறும் இலவம்பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.புதுவையில்  வாகனங்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய  சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மணல் மற்றும்  குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டர்கள் தார்பாய்களை போட்டு  அவற்றை மூடி எடுத்துச் செல்வதில்லை. இதனால் சாலைகளில் செல்லும் இருசக்கர  வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவ்விவகாரத்தால்  டிராக்டர் மற்றும் லாரிகளை மறித்து ஓட்டுனர்களிடம் ெபாதுமக்கள் ஆங்காங்கே  வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் இதை  கண்டுகொள்வதில்லை.

தற்போது புதுச்சேரி நகர பகுதியில் முக்கிய சாலைகள்  மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் உள்ள இலவம்பஞ்சு மரங்களில் காய்கள்  வெடித்து பஞ்சுகள் ஆங்காங்கே பறந்து சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன.குறிப்பாக வழுதாவூர் ரோடு, கோரிமேடு சாலை, கொட்டுப்பாளையம், மறைமலையடிகள்  சாலை, முதலியார்பேட்டை கடலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளை நிறத்தில்  இலவம் பஞ்சுகள் காற்றில் பறந்துவந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை  பதம்பார்த்து வருகின்றன. இதனால் சில பகுதிகளில் விபத்துகளும் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள இம்மரங்களை முன்கூட்டியே  குத்தகைக்கு விட்டு இலவம் பஞ்சுகளை முன்கூட்டியே பறித்து அதன்மூலம்  சம்பந்தப்பட்டவர்கள் வருவாயை ஈட்டாமல் அலட்சியமாக விடுவதால் இதுபோன்ற நிலை  ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. ஒவ்வொரு  ஆண்டும் இந்த பிரச்னை தொடர்கதையாகி வருவதால் அவற்றுக்கு தீர்வு காண உரிய  நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி  உள்ளனர்.


Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது