×

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணர் ஆராதனை விழா இளையராஜா இசையஞ்சலி நடந்தது

திருவண்ணாமலை, மே 3: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில், பகவான் ரமணரின் 69வது ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, இசையமைப்பாளர் இளையராஜா இசையஞ்சலி செலுத்தினார்.மதுரை அடுத்த திருச்சுழியில் அவதரித்து, அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையை தரிசிக்க வந்தவர் மகான் ரமணர். அண்ணாமலையார் கோயில் பாதாள லிங்கம், தீபமலையின் விருபாட்சி குகை போன்ற இடங்களில் ரமணர் தவமிருந்தார். கடந்த 14.4.1950 அன்று திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்.
இந்நிலையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேய்பிறை திரயோதசி தினத்தன்று பகவான் ரமணரின் ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 69வது ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ருத்ர ஜெபம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு தமிழ் பாராயணம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, வெளிநாட்டினர் உள்பட ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டிருந்து தரிசித்தனர்.
மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையஞ்சலி நடைபெற்றது. ரமணரை போற்றும் பாமாலைகளை இசைத்து இளையராஜா ஆராதனை செய்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா மற்றும் ஆஸ்ரம நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : festival ,Ramanar Aradhana ,Thiruvannamalai Ramanasramam Ilayaraja ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...