×

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக்கு நியமிக்கப்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு துணைவேந்தர் சிறப்பு கண்காணிப்பாளர்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு

திருவலம், மே 3: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுக்கு நியமிக்கப்பட்ட  துணை கண்காணிப்பாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகளை துணைவேந்தர் சிறப்பு கண்காணிப்பாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 130 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. கல்லூரிகளில் 2018-19ம் ஆண்டிற்கான பருவ கால தேர்வுகள் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இத்தேர்வுகள் இம்மாதம் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் தங்களுக்குரிய தேர்வு மையத்திற்கு செல்வதில்லை என புகார்கள் வந்தது.இதையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் தாமரைச்செல்வியின் பரிந்துரையின் பேரில் நடந்த ஆய்வில் வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெ.பெருவழுதி கூறியதாவது: பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் இத்தேர்வுகளுக்காக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், பிற கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் மற்றொரு கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் மையங்களில் காலை வினாத்தாள்களை முறையே அவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்படுகிறது.பின்னர், தேர்வு முடியும் வரை மையத்திலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இறுதியாக விடைத்தாள்களை முறையே சீல் வைக்கும் வரையிலான அனைத்து பணிகளில் ஈடுபட வேண்டுமென நியமிக்கப்பட்டனர். மேலும், தேர்வு நடைபெறும் 6 முதல் 7 மையங்களை கண்காணிக்க பல்கலைக்கழகம் சார்பில் பறக்கும்படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், தேர்வு எழுதும் மையங்களுக்கு நியமிக்கப்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் சரிவர தேர்வு மையங்களுக்கு செல்வதில்லை எனவும், அவர்கள் காலையில் வந்து சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் கையொப்பமிட்டு உடனே சென்று விடுவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 25 மற்றும் 26ம் தேதி பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும் தேர்வு மையங்களில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, சில கல்லூரிகளில் தேர்வு மையத்தில் நியமிக்கப்பட்ட துணைகண்காணிப்பாளர்கள் தங்களுக்குரிய தேர்வு மையத்திற்கு வரவில்லையென விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்ட துணைகண்காணிப்பாளர்களை மாற்றி நேற்று (2ம் தேதி) புதிய தேர்வு மைய துணைகண்காணிப்பாளர்களை நியமிக்கப்பட்டனர். மேலும் தேர்வு மையத்திற்கு வராமல் இருந்த சம்பந்தப்பட்ட துணை கண்காணிப்பாளர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vellore Thiruvalluvar University Examination Appointed ,Vigilante Special Inspectors ,
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...