×

நாளை கத்திரி தொடங்கும் நிலையில் வேலூரில் 111.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது அனல் காற்றில் வெந்து தவித்த மக்கள்

வேலூர், மே 3:நாளை கத்திரி தொடங்கும் நிலையில், வேலூரில் அனல் காற்றுடன் நேற்று 111.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக 103 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 28ம் தேதி திடீரென வெயில் குறைந்து 100.4 டிகிரியாக பதிவானது. தொடர்ந்து மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி, கடந்த 30ம் தேதி 104 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் மேலும் அதிகரித்து 104.5 டிகிரியாக பதிவானது.இந்நிலையில், வேலூரில் நேற்று திடீரென வெயில் உக்கிரமாக சுட்டெரித்து 111.7 டிகிரி பதிவாகியிருந்தது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலின் அளவு இதுவாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 16ம் தேதி 107.6 டிகிரி வெயில் பதிவாயிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி முதலே அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வீடுகளுக்கு உள்ளேயும் புழுக்கம் அதிகரித்திருந்தது. வெப்பத்தை தணிக்க ஐஸ்கிரீம், ஜூஸ் கடைகளை அதிகப்படியான மக்கள் நாடிச் சென்றனர். சாலையோரங்களில் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை சூடுபிடித்தது. பெரும்பாலான கிணறுகள் வற்றிவிட்டதால், தனியார் நீச்சல் குளங்களில் மக்கள் குவிந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு மேலாகியும் அனல் காற்றின் தாக்கம் கடுமையாக இருந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.நாளை தொடங்கி வரும் 29ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கிறது. ஆனால், கத்திரி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே வேலூரில் வெயில் 111 டிகிரியை தாண்டிவிட்டதால் அக்னி காலத்தில் எப்படி இருக்குமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 60 சதவீதம் வரை குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதன்படி, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் மாநகராட்சி பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் 5 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இன்னும் ஒரு மாதத்துக்கு கத்திரி வெயில் நீடிப்பதால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும். எனவே, போதிய தண்ணீர் சப்ளை செய்யவும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Vellore ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...