×

பானி புயல் எதிரொலி திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றம்

திருவொற்றியூர், மே 3:  பானி புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்கள் படகு, கட்டுமரம், வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள பானி புயல் இன்று (3ம் தேதி) ஒடிசா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக வடசென்னை கடலோர பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூரில் காற்று அதிகளவில் வீசுகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகள் சீற்றத்துடன் ஆக்ரோஷமாக வருவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் கடலோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பைபர் படகு, கட்டுமரம், மீன்பிடி வலைகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் கொண்டு வந்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், திருச்சினாங்குப்பம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கரையோரம் வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், ‘‘வானிலை அறிக்கையின்படி, பானி புயலால் வடசென்னை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் மீனவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கடலோர பகுதிகளை நாங்கள் மட்டுமின்றி மின்வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்’’ என்றனர்.

Tags : Bani ,Thiruvottiyur ,Ennore ,areas ,
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்