×

மதுரையில் தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலப்பணி அடுத்த ஆண்டு முடிவடையும்நேர்கோட்டில் அமையும் 225 தூண்களில் முதல் தூண் தயார்

மதுரை, மே 1: மதுரையில் தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நேர்கோட்டில் அமையும் 225 தூண்களில் முதல் தூண் தயாரானது. ஓராண்டில் பணிகள் முடித்து போக்குவரத்துக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை- நத்தம் இடையிலான 35 கிமீ. இருவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்று ரூ.1028 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்கிறது. இதில் மதுரை சொக்கிகுளம் சந்திப்பு முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கிமீ. தூரம் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ.416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கிமீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் 8 மாதங்களுக்கு முன் தொடங்கியது.
பறக்கும் பாலத்திற்காக 7.4 கிமீ. தூரமும் மொத்தம் 225 தூண்கள் எழுப்பப்படுகின்றன. இதில் தூண்கள் அமைக்கும் பணி நவீன தொழில் நுட்ப முறையில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. சொக்கிகுளத்தில் முதல் தூண் இருபக்க சிறகுகளுடன் அமைத்து தயாராகி உள்ளது. அடுத்தடுத்து அமைந்துள்ள தூண்களில் சிறகு பகுதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 225 தூண்களும் வளைவின்றி நேர்கோட்டில் அமைக்கப்படுகின்றன. சாலையின் இருபக்கமும் விரிவாக்கம் செய்யப்பட்டு, பறக்கும் பாலத்தின் உயரத்திற்கு ஏற்ப மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை நாகனாகுளம் கண்மாய் கரை சுமார் 2 கிமீ. தூரம் தூண்கள் எழுந்துள்ளன. அடுத்தடுத்து தூண்கள் எழுப்புதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பாலம் கட்டுவதற்கு நாராயணபுரம் பேங்க் காலனி அருகே சாலையோரம் அமைந்திருந்த கோயில் நவீன தொழில் நுட்ப முறையில் நகர்த்தி வைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பிரதான பணியான தூண்களை இணைக்க ரெடிமேடு காங்க்ரீட் தளங்கள் வேறு தனி இடத்தில் தயாராகி வருகிறது. இதனை லாரிகளில் ஏற்றி வந்து கிரேன் மூலம் விரைவாக பொருத்துவதற்கான நவீன இயந்திரங்கள் வந்துள்ளன. இறுதி கட்டமாக சொக்கிகுளம் பிடிஆர் சிலையில் இருந்து நேராக தெற்கு நோக்கியும், அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி ஈகோ பார்க் அருகில் இருந்தும், மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்தும் பறக்கும் பாலத்திற்கு ஏறி, இறங்கும் வகையிலும் பாதை அமைக்கப்படுகிறது. இதேநேரத்தில் ஊமச்சிகுளத்தில் இருந்து நான்குவழிச்சாலைக்கான விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘பறக்கும் பாலம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. இன்னும் ஓராண்டில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிட்டுள்ளோம். இதுவே தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலமாகும். ஊமச்சிகுளத்தை தாண்டி அமையும் நான்குவழிசாலை நத்தம் நான்குவழிச்சாலையில் இணைந்து கொட்டாம்பட்டி அருகே திருச்சி நான்குவழிச்சாலையில் சேரும்’ என்றார்.

Tags : pillars ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...