×

மாவட்டம் ஊருக்கு வெளியே கடைகள் பீதியுடன் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள்

திண்டுக்கல், மே 1: மாவட்டத்தில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ளதால், ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு சார்பில் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. திறக்கப்பட்ட கடைகள் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை அருகில் இல்லாதவாறு இருக்க வேண்டும் என்பதால் கிடைத்த இடங்களில் எல்லாம் கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
இதில் பெரும்பாலானவை கிராமங்களின் எல்கையில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, சுடுகாட்டுப் பகுதியில் திறக்கப்பட்டன. கடை திறந்தால் தான் வேலை என ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதால் கிடைக்கும் இடத்தில் கடை திறக்க வேண்டிய நிலையில் ஊழியர்கள் இருந்தனர். மேலும் பார் நடத்துபவர்கள் கடைகள் திறந்தால் ஏற்படும் பிரச்னைகளை தாங்கள் சமாளித்து கொள்வதாக கூறியதால் அவர்கள் தேர்வு செய்த இடங்களிலும் கடைகள் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட கடைகள் முற்றிலும் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளன.
திண்டுக்கல், பழநி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் ஏராளமான கடைகள் உள்ளன. குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ளன. இந்த பகுதியில் ஊழியர்கள் மீது பணம் பறிக்கும் முயற்சியில் தாக்குதல் நடப்பது அடிக்கடி நடக்கிறது. இதனால் பணியாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இரவு 10 மணிக்கு கடையை மூடி விட்டு காட்டுப்பகுதியில் இருந்து பணத்தை எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. எடுத்து வரும்போது கொள்ளையடிக்க வாய்ப்புள்ளதால், கடையில் பணத்தை வைத்து விட்டு வரவேண்டிய நிலை உள்ளது. கடையில் உள்ள பணம் திருடப்பட்டாலும் விற்பனையாளர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் வருகிறது. சூழ்நிலையால் இந்த வேலையில் தொடர்கிறோம்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கடைகளை அமைத்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தால் ஊழியர்களே பொறுப்பு என அனைத்தையும் எங்கள் மீது சுமத்துகின்றனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை என எது நடந்தாலும் ஊழியர்களின் கவனக்குறைவினால் நடந்தது என எங்கள் மீதே நடவடிக்கை உள்ளது.
எப்படியாவது வியாபாரம் இருந்தால் போதும் என செயல்படுகின்றனர். நகர்ப்பகுதிக்கு கடைகளை மாற்றுவதில் பார் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இப்பிரச்னையில் டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு இரவு கடையை பூட்டும்போது விற்பனையாளரிடம் மேற்பார்வையாளர் பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Taskmakers ,town ,
× RELATED பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு...