அய்யம்பாளையத்தில் மாங்காய் சீசன் தொடங்க தாமதம் மழை பெய்யாததால் காய்ப்பு மந்தம்

பட்டிவீரன்பட்டி, மே 1:  அய்யம்பாளையத்தில் கோடை மழை பெய்யாததால் மாங்காய் சீசன் ெதாடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி மற்றும் தாண்டிக்குடி மலை அடிவார உள்கோம்பை, சித்தையன்கோட்டை பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம்  நடைபெற்று வருகின்றது. கல்லாமை, காசா, செந்தூரம், இமாம்பஸ், காளைப்பாடி, கருங்குரங்கு, காசாலட்டு  போன்ற ரகங்கள் அதிகளவில் காய்க்கின்றன. பல வருடங்களுக்கு பின்பு இந்த வருடம் மாமரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்துக்குலுங்கியது. இதனால் கோடை மாங்காய் சீசன் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்பினர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து மரங்களுக்கு மருந்து அடித்தனர்.
ஆனால் மரங்களில் பூக்கள் பிஞ்சு விடும் சமயத்தில் மழை பெய்யவில்லை. மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. இதனால் மரங்களிலிருந்து அதிகளவில் பிஞ்சுகள்  உதிர்ந்துவிட்டன. உதிராமல் மரத்தில் தங்கிய பிஞ்சுகள் திரட்சியாக வருவதற்கு போதிய மழை பெய்யவில்லை. இதனால் மரத்தில் தங்கிய பிஞ்சுகள் பிஞ்சாகவே உள்ளன. எனவே இம்மாதம் ஆரம்பிக்கவேண்டிய மாங்காய் சீசன் காலதாமதம் ஆகின்றது.
இதனால் மா விவசாயிகளும், மாமரங்களை குத்தகைக்கு எடுத்த வியாபாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் பிப்ரவரி கடைசியில் மாமரங்களில் பூப்பூக்கும்.   ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் களைகட்டும். சென்ற வருடம் பருவம் தவறி பெய்த மழை, பருவமாற்றம் மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் வெகுவாக குறைந்தது. இந்த வருடமும் இதேபோல் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. இதனால் பாதிக்கப்படும் மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தகுந்தாற் போல் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Ayyambalayam ,season ,start ,mango season ,
× RELATED அடைமழை கால ஆபத்து