×

பொருத்தப்பட்ட ரேடியோ காலரை காணவில்லை விநாயகா யானை முதுமலையில் அட்டகாசம்

கூடலூர், மே 1:  முதுமலை வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வரும் விநாயகா யானையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானை விநாயகாவை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் விட்டனர். இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். விளை நிலங்களில் புகுந்து பழக்கப்பட்ட இந்த யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி, புளியாளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலரை அடையாளம் வைத்தே யானை ஊருக்குள் வருவது குறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் அளித்து வந்துள்ளனர்.
 தற்போது யானைக்கு பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் கடந்த சில நாட்களுக்கு முன் அறுந்துவிட்டது.முதுமலை வனப்பகுதியில் கிடந்த காலர் ஐடியை மீட்டு பாதுகாப்பாக வனத்துறை அலுவலகத்தில் வைத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக பகுதி கிராம மக்கள் கூறுகையில், ‘‘விவசாயிகளின் பயிர்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தினால், அதற்கு உரிய நிவாரணம் அளிப்பதாக  வனத்துறையினர் உறுதி அளித்திருந்தனர். ஆனால் கடந்த பல மாதங்களாக பயிர்களுக்கான இழப்பீட்டை வனத்துறை வழங்கவில்லை. இப்போது விநாயகா யானையும் பயிர்களை சேதப்படுத்த துவங்கியுள்ளது.  விநாயகா யானையை பிடித்து முதுமலை  முகாமிற்கு கொண்டு செல்லவும், பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தோம்.
 அப்போது கிராம மக்களிடம் பேச்சு நடத்திய புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குனர் மற்றும் வன அதிகாரிகள் இந்தயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என  உறுதியளித்தனர். யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் பயிர் இழப்புகளுக்கு உரிய இழப்பீட்டினை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்கின்றனர்.
  இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறுகையில், ‘‘விநாயகா யானைக்கு பொருத்தப்பட்டிருந்த காலர் ஐடி மூலம் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களாக யானையின் நடமாட்டம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. யானை கடைசியாக நடமாடிய பகுதியில் சென்று வனத்துறையினர் பார்த்தபோது அங்கு காலர் ஐடி அறுந்து கிடப்பதை பார்த்து அதனை எடுத்து வந்துள்ளனர். மேலும் காலர் ஐடி மரத்தின் கிளைகளில் சிக்கி அல்லது வேறு யானைகளுடன் சண்டையிட்டதில் அறுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வனப்பகுதி ஊழியர்கள் மூலம் விநாயகா யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.

Tags : Mudumalai ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...