×

குடிநீர் ஆதாரமாக விளங்கும் குன்னூர் வைகை ஆற்று பகுதியில் பழுதாகி வரும் உறை கிணறுகள் குடிநீர் வடிகால் வாரியத்தினர் கவனிப்பார்களா?

ஆண்டிபட்டி, மே.1: பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குன்னூர் வைகை ஆற்றில் மணல் சுரண்டுவதால், உறை கிணறுகள் பழுதாகி குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர் மற்றும் 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக வைகை ஆறு உள்ளது. ஆண்டிபட்டி நகர் மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு அரசு சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கி வந்தனர். இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், மழை தரும் மரங்களை அழித்ததாலும், கனிம வளங்கள் சுரண்டப்பட்டதாலும், கடந்த பல வருடங்களாக எதிர்பார்த்த மழைப்பொழிவு இப்பகுதியில் இல்லை. இதனால் 80 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது 1000 அடிக்கும் கீழே அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து அரசு பல லட்சம் மதிப்பீட்டில் குன்னூர் வைகை ஆற்றுப் பகுதியில் உறை கிணறுகளை அமைத்து பூமிக்கடியில் குழாய்கள் அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக பல கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர். மேலும் வைகை அணை பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தேனி, பெரியகுளம் பகுதி, ஆண்டிபட்டி பேரூராட்சி, உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட கிராமத்தில் வசிக்கும் பல லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குன்னூர் வைகை ஆற்றுப் பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள உறை கிணறு பகுதியில் மணல் சுரண்டப்படுவதால் உறைகிணறுகள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் ஏற்கனவே குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த பல உறை கிணறுகள் பழுதாகி போனது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு பணம் வீண் விரயம் ஆவது மட்டுமன்றி பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழலும் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வறட்சி காலத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை  கருத்தில் கொண்டு, குன்னூர் வைகை ஆற்றுப் பகுதியில் உறை கிணறுகள் அமைத்து உள்ள பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : casing water fields ,drinking water drainage board ,river area ,Coonoor Vaigai ,
× RELATED குடிநீர் வடிகால் வாரியம், சென்னை...