×

உலக வங்கி நிதியுதவியுடன் குந்தா அணையை தூர்வார ஆய்வு

மஞ்சூர், மே. 1:  மஞ்சூரை அடுத்த குந்தா அணையில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி உலக வங்கி நிதியுதவியுடன் அணையை துார் வார முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
 நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 மின்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 இந்நிலையில் குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர், மின் உற்பத்திக்கு பின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.
பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60ெமகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதை தொடர்ந்து வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்நிலையில் குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை தூர் வாராததால் பெருமளவு சேறு, சகதி தேங்கியுள்ளது. பருவ மழைக் காலங்களில் கரையோரங்களில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் செடி, கொடிகள், மரங்கள் அணையில் சேர்கிறது. இதனால் குந்தா அணையில் 50 சதவீதத்திற்கும் மேல் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பி விடுகிறது.  
இதையடுத்து குந்தா அணையை முழுமையாக துார்வார மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக உலக வங்கி ரூ.18.18 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதை தொடர்ந்து அணை துார்வாருவதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தூர்வாரும் போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் சேறு, சகதிகள், மணல் மற்றும் கழிவுகள் கொட்டுவதற்காக மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரியத்திற்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.
   ஆனால் இந்த இடம் சதுப்பு நிலமாக உள்ளதால், அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் ஆட்சேபனை எழுந்தது. இதனால் குந்தா அணை தூர் வாருவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மின்வாரிய தரப்பில் அணை தூர் வாருவதில் உள்ள பிரச்னைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குந்தா அணையை நேரில் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவர் செல்வராஜ், குந்தா தாசில்தார் சரவணன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரகு, செயற்பொறியாளர்கள் ராஜதுரை (அணை பராமரிப்பு மற்றும் வளர்ச்சி திட்டம்), புகழ் (கட்டிடவியல்), வருவாய் ஆய்வாளர் துரைசாமி, கிராமநிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.
இதில் அணையை பார்வையிட்ட கலெக்டர் இன்னசென்ட திவ்யா அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
   இதையடுத்து அணை தூர்வாரும் போது வெளியேற்றப்படும் சேறு, கழிவுகளை கொட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட மின்வாரிய மேல் முகாம், கெத்தை சாலை மற்றும் எமரால்டு அட்டுபாயில் பகுதிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். இதில் சேறு, சகதிகள் கொட்டுவதற்கான இடம் முடிவானதும் குந்தா அணை முழுமையாக துார்வாரும் பணிகள் துவக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : World Bank ,
× RELATED தோழி மகளிர் விடுதியில் உலக வங்கி குழுவினர் ஆய்வு