×

ஊர்வலம், போராட்டத்தை கண்காணிக்க போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமரா

ஈரோடு, மே 1:  ஈரோடு மாவட்டத்தில் பணியில் இருக்கும் காவலர்களை கண்காணிக்கவும், ஊர்வலம், போராட்டத்தின் உண்மை தன்மை கண்டறிய முதற்கட்டமாக 30 போலீசாருக்கு சீருடையில் அணியும் பாடி வோர்ன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் போலீசார் பணியில் இருக்கும் போது நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தானாக பதிவு செய்யவும், ஊர்வலம், போராட்டம், போக்குவரத்து பணிகளை காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கவும் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் போலீசாரின் சீருடையுடன் அணியக்கூடிய 30 கேமரா வாங்கப்பட்டு, அதில் 15 கேமரா சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும், 15 கேமரா போக்குவரத்து போலீசாருக்கு நேற்று வழங்கப்பட்டது.  சில நிகழ்வுகளில் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், நீதிமன்றங்களில் ஆதாரமாக தாக்கல் செய்ய உதவியாக இருக்கும். இந்த கேமரா வைத்திருக்கும் காவலர் பணியில் இருக்கும் இடத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், தாமகவே கேமராவில் பதிவு செய்யும்.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் இத்திட்டம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். தற்போது, ஈரோடு சப்-டிவிசனில் உள்ள ஈரோடு டவுன், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், தாலுகா மற்றும் டவுன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் இந்த கேமரா தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கேமராவுடன் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போலீசாரை கண்காணிக்க காவல் கட்டுப்பாட்டு அறையில் தனி மானிட்டர், லைவ் டிராக்கிங், லைவ் ஸ்டிரிமிங் ஆகிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்தில் இதேபோல் 200 கேமரா வாங்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : fight ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது