×

இந்திராகாந்தி சிலை முதல் மூலகுளம் வரை ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

புதுச்சேரி, மே 1: புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் மூலகுளம் வரையிலான விழுப்புரம் சாலையில் உழவர்கரை நகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனிடையே கோரிமேட்டில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர தட்டிகளை வைத்திருந்த வியாபாரிகள் மீது காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதிகாரிகள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கு இடமளிக்காமல் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்கட்டமாக கோரிமேடு ஜிப்மர் எதிரே முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தடையை மீறி மீண்டும் விளம்பர போர்டுகளை சாலையில் வைத்திருந்த 4 வியாபாரிகள் மீது கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தொடர்ந்து மீறினால் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

 நேற்று முன்தினம் நெல்லித்தோப்பு, லெனின் வீதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்திராகாந்தி சிலையில் தொடங்கி மூலகுளம் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அதிரடியாக அகற்றப்பட்டன.
 உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் பொதுப்பணித்துறை, நகராட்சி, மின்துறை, காவல்துறை யினர் இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்து சாலையோரம் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், விளம்பர பதாகைகள், பூ மற்றும் இறைச்சி கடைகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. சில வியாபாரிகள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விளம்பர தட்டிகளையும் பணியாளர்களை நியமித்து அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக விழுப்புரம் சாலையில்4 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. டிராபிக் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது ஒருபுறமிருக்க, புஸ்சி வீதியில் நகராட்சி அதிகாரிகள் தங்களது வாகனம் மூலம் நேற்று வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வந்துள்ள புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதால் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினர். அரசு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதுச்சேரி முக்கிய சாலைகள், பகுதிகள் விரிவாக்கமடைந்து வரு
கிறது. இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.


Tags : invaders ,
× RELATED மக்காச்சோளத்தில் படையெடுக்கும் படைப்புழுக்கள்