×

முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சியில் புயலால் பாதித்த மரங்கள், தெரு மின் விளக்குகள் சீரமைக்கும் பணி துவக்கம்

முத்துப்பேட்டை, மே 1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடைசி பகுதியில் உள்ளதால் அரசின் அனைத்து அடிப்படை வசதிகளும் பின்தங்கிய நிலையில் தான் பல ஆண்டுகளாக உள்ளது. இருந்தும் அவசிய தேவைகளை இப்பகுதி மக்கள் இதுநாள் வரை போராடிதான் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம்தேதி தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவம் இப்பகுதியை பெரும்பாதிப்புக்குள்ளாக்கியது. தற்போது வரை சகஜ நிலைக்கு வரவில்லை என்றாலும் புயலால் சீர்குலைந்து கிடப்பதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய முன்வரவில்லை.  இதில் குறிப்பாக அம்பேத்கர் நகர் பகுதி  சாலையோரம் ஆங்காங்கே கஜாவில் வீழ்ந்த மரங்கள் இன்றும் அகற்றாமல் கிடக்கிறது. இதில் காலனிக்கு செல்லும் சிமெண்ட் சாலையோரம் இருந்த பனை மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை நிமிர்த்தவோ அகற்றவோ ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த பயனுமில்லை. அதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதளவில் உள்ளது.

அதேபோல் இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பொருத்தி இருந்த மின் கம்பங்கள் கஜாபுயலால்  அடியோடு சாய்ந்தது. அதற்கு பதில் மின்சார வாரியம் சார்பில் புதிய மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டது ஆனால் இதுநாள் வரை புதிய மின் கம்பங்களை நடப்படவில்லை. இதனால் அந்த மின்கம்பங்கள் மக்களுக்கு இடையூறாக உள்ளதுடன் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருண்டு காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் நலன் கருதி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய சீரமைப்பு பணியை மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் நேற்று முன்தினம் 27ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த  செய்தி எதிரொலியாக நேற்று முத்துப்பேட்டை  ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்  மற்றும்  ஊராட்சி செயலர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் உடன் சீரமைப்பு பணிகளை துவக்கினர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள்  செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags : storm ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...