×

திருக்குறுங்குடி மலையில் காட்டுத் தீ

களக்காடு, மே 1:  திருக்குறுங்குடி மலையில் காட்டுத் தீ, வேகமாக பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அனல் பறக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளன. மரங்களும் காய்ந்து காட்சி அளிக்கிறது. இதையொட்டி காட்டுத் தீ தடுப்புப் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். வனப்பகுதியில் தீ தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் திருக்குறுங்குடி நம்பிகோவில் பீட் வனப்பகுதியில் நேற்று இரவில் திடீர் என காட்டுத் தீ பற்றியது. மளமளவென தீ பரவி பற்றி எரிந்து வருகிறது. தகவலறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் களக்காடு - திருக்குறுங்குடி வனச்சரகங்களை சேர்ந்த வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீ பற்றி எரியும் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ எரியும் பகுதி மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி ஆகும். வனத்துறையினர் இரவில் அப்பகுதியை அடைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மண்ணை அள்ளிப் போட்டும், மரக் கிளைகளை வைத்து அடித்தும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  கடந்த 2 நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பணகுடி மலையில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. அங்கிருந்து காட்டுத் தீ திருக்குறுங்குடி மலைக்கு பரவியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த மலையில் தீ கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் நேற்று இரவில் மீண்டும் பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : hill ,Tirukurukundi ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!