×

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 3 கம்பெனி துணை ராணுவம் வருகை தூத்துக்குடி, மே 1:தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக

கடந்த ஏப்.18ம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது.இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளராக சண்முகையா, அதிமுக வேட்பாளராக மோகன், அமமுக வேட்பாளராக சுந்தர்ராஜ் மற்றும் விவசாயிகள் சங்கம், சுயேட்சைகள் உள்ளிட்ட 18 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நாளை (மே 2ம் தேதி) கடைசி நாளாகும். மனுதாக்கல் முடிந்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அந்தந்த தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்றும், இன்றும், நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஓட்டப்பிடாரம் தொகுதியில் வரும் மே 4 மற்றும் 10ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.இடைத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 3 கம்பெனி துணை ராணுவத்தினர் நேற்று தனி ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனங்களில் ஓட்டப்பிடாரம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



Tags : constituency security workforce ,Ottapiramar ,Company Subcommittee ,Thoothukudi ,constituencies ,Tamil Nadu ,Lok Sabha ,
× RELATED ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்...